search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களவை விவாதம்
    X
    மாநிலங்களவை விவாதம்

    மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்

    மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக மனு கொடுத்துள்ளனர்.
    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பின் மூலம் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மசோதாக்கள் மீது விவாதம் முடிந்து, வேளாண் மந்திரி பதிலுரை நிகழ்த்தியபோது, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். 

    இன்றைய அலுவலல் நேரம் முடிந்துவிட்டதால், மந்திரியின் பதிலுரையை ஒத்திவைக்க வேண்டும் என்றும், நாளை விவாதத்தை தொடர்ந்து நடத்தி அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தி மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆனால் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

    இதனால் கடும் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். அவையை நடத்திய துணைத்தலைவர் ஹரிவன்சின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பினர். பேரவை விதிகள் அடங்கிய ஆவணப் புத்தகத்தையும் கிழித்து எறிந்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்த அமளிக்கு இடையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 

    இந்நிலையில், மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக மாநிலங்களவை செயலரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீது அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, நாளை பரிசீலனை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதுகுறித்து காங்கிரஸ் எம்பி அகமது பட்டேல் கூறுகையில், ‘மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஜனநாயக மரபுகளை பாதுகாக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக அவரது  இன்றைய அணுகுமுறை ஜனநாயக மரபுகள் மற்றும் செயல்முறைகளுக்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தது. அதனால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தோம்’ என்றார்.
    Next Story
    ×