search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களவை விவாதம்
    X
    மாநிலங்களவை விவாதம்

    கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம்

    எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2 வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
    புதுடெல்லி:

    விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல்) மசோதா, விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவைக்கு வந்தன. 

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல்) மசோதா, விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

    மசோதாக்கள் மீது விவாதம் நடந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மசோதாவில் உள்ள பாதகமான அம்சங்கள் குறித்து விளக்கி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். காரசாரமாக நீடித்த இந்த விவாதம் மதியம் வரை நீடித்தது.

    அதன்பின்னர், விவாதத்திற்கு பதிலளித்து வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் பேசினார்.  அப்போது விவாதத்தை இன்றுடன் முடித்துக்கொள்ளக்கூடாது, நாளையும் நீட்டிக்க வேண்டும் என்றும், வேளாண் மந்திரியின் பதிலுரையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். ஆனால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது.  இதனால் கடும் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியை தொடர்ந்தனர். இதனையடுத்து மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

    பின்னர் சிறிது நேரத்தில் அவை கூடியபோது மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. மசோதாக்கள் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் ஏற்கப்படவில்லை. வேளாண் மசோதாக்கள் மீது திமுக எம்பி திருச்சி சிவா கொண்டு வந்த திருத்தங்களும் தோற்கடிக்கப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து அவை நாளை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
    Next Story
    ×