search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்குவங்காளத்தில் கைதான 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போது எடுத்தபடம்.
    X
    மேற்குவங்காளத்தில் கைதான 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போது எடுத்தபடம்.

    கேரளா, மேற்கு வங்காளத்தில் என்.ஐ.ஏ. அதிரடி- 9 அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது

    கேரளாவிலும், மேற்கு வங்காளத்திலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனைகளில் 9 அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இதன்மூலம் டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடக்கவிருந்த பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும் விமானங்களை மோதி அதிபயங்கர தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரம் பேரை கொன்று குவித்தவர்கள், பின்லேடனின் அல்கொய்தா இயக்க பயங்கரவாதிகள் ஆவர்.

    2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல்கள் உலகையே உலுக்கின.

    தடை செய்யப்பட்டுள்ள இந்த இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், முக்கிய இலக்குகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவிக்க சதித்திட்டம் தீட்டி இருப்பதாக என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகளுக்கு உளவு அமைப்புகளிடம் இருந்து ரகசிய தகவல்கள் கிடைத்தன.

    அவற்றின் அடிப்படையில் கடந்த 11-ந் தேதி ஒரு வழக்கை பதிவு செய்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர். அதில் மேற்கு வங்காளத்திலும், கேரளாவிலும் குறிப்பிட்ட இடங்களில் அல்கொய்தா பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அங்கு அதிரடி சோதனைகளை நடத்த முடிவு எடுத்தனர்.

    அதன்படி, நேற்று காலை ஒரே நேரத்தில் கேரளாவின் எர்ணாகுளத்தில் பல இடங்களிலும், மேற்கு வங்காளத்தில் முர்ஷிதாபாத்திலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தினார்கள். அவற்றில், எர்ணாகுளத்தில் 3 பயங்கரவாதிகளும், முர்ஷிதாபாத்தில் 6 பயங்கரவாதிகளும் சிக்கினர். அவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

    அவர்கள் வசமிருந்து டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், பயங்கரவாத இலக்கியங்கள், கூர்மையான ஆயுதங்கள், நாட்டு துப்பாக்கிகள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கவசம், உள்நாட்டில் வெடிக்கும் சாதனங்கள் தயாரிக்க வழிகாட்டும் கட்டுரைகள் மற்றும் இலக்கியங்கள், பேட்டரிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

    எர்ணாகுளத்தில் கைது செய்யப்பட்டவர்கள் முர்ஷித் ஹசன், இயாகுப் பிஸ்வாஸ், மொசரப் ஹூசேன் ஆகிய 3 பேர் ஆவார்கள். முர்ஷிதாபாத்தில் கைது செய்யப்பட்டவர்கள் நஜ்மஸ் சாகிப், அபு சுபியன், மைனுல் மொண்டல், லியு யீன் அகமது, அல் மாமுன் கமால், அதிதுர் ரகுமான் ஆகிய 6 பேர் ஆவார்கள்.

    இவர்கள் அனைவரும் பாகிஸ்தானை சேர்ந்த அல்கொய்தா பயங்கரவாதிகளால் சமூக ஊடகங்கள் வழியாக மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்; டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த தூண்டப்பட்டு, தயார் செய்யப்பட்டு வந்தவர்கள் என்ற திடுக்கிடும் தகவல் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்காக இவர்கள் தீவிர நிதி வசூலில் ஈடுபட்டு வந்ததுடன், இவர்களில் சிலர் டெல்லிக்கும், காஷ்மீருக்கும் சென்று ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் வாங்குவதற்கு திட்டமிட்டிருந்ததும் என்.ஐ.ஏ. விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

    சரியான நேரத்தில் பயங்கரவாதிகள் 9 பேர் கைது செய்யப்பட்டு விட்டதால், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அவர்களது சதியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேர்த்தியாக முறியடித்து உள்ளனர்.

    என்.ஐ.ஏ.யின் அதிரடி நடவடிக்கை குறித்து அதன் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

    கைது செய்யப்பட்ட 9 பேர் கும்பலுக்கு முர்ஷித் ஹசன்தான் தலைவன். இந்தியாவில் முக்கியமான நிறுவனங்களையும், இலக்கு வைக்கப்பட்ட கொலைகளையும் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்காக ஆயுதங்கள், தானியங்கி துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகளையும், தாக்குதல்கள் நடத்துவதற்கு வெடிபொருட்களை வாங்குவதற்கான இறுதிக்கட்டத்தில் இருந்திருக்கிறார்கள். இந்த கும்பலில் சிலர் ஐ.இ.டி. என்னும் அதிபயங்கர வெடிக்கும் சாதனத்தை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற முயற்சித்து வந்துள்ளனர். பட்டாசுகளை அதிபயங்கர வெடிக்கும் சாதனமாக மாற்றவும் திட்டமிட்டுள்ளனர்.

    இத்துடன் வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களிலும், நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அல்கொய்தா அமைப்பை ஏற்படுத்தவும் இவர்கள் முயற்சித்து வந்திருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே முர்ஷிதாபாத்தில் கைது செய்யப்பட்ட நஜ்மஸ் சாகிப், அபு சுபியன், மைனுல் மொண்டல், லியு யீன் அகமது, அல் மாமுன் கமால், அதிதுர் ரகுமான் ஆகிய 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள், கொல்கத்தா கொண்டு வந்து, அங்கு பாங்ஷால் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை வரும் 24-ந் தேதி வரை என்.ஐ.ஏ. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    அவர்களை டெல்லிக்கு அழைத்து சென்று விசாரித்து, 24-ந் தேதி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆஜர்படுத்துவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.
    Next Story
    ×