search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம்
    X
    பாராளுமன்றம்

    தொற்றுநோய்கள் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

    சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 6ம் நாளான இன்று, மாநிலங்களவையில் தொற்றுநோய்கள் சட்டத் திருத்த மசோதாவை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஹர்ஷ்வரதன் தாக்கல் செய்தார். அதன்பின்னர் மசோதா மீது விவாதம் நடைபெற்றது.

    மசோதாவிற்கு ஆதரவாக பாஜக  எம்பி சரோஜ் பாண்டே, சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் பேசினர். மசோதாவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் பேசினார். 

    இந்த சட்டத்திருத்தம், ஆபத்தான தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க உதவுவதுடன், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது. இதுபோன்ற நோய்கள் பரவாமல் தடுக்க மத்திய அரசின் அதிகாரங்களை விரிவுபடுத்துகிறது. சுகாதாரப் பணியாளர்களை அவமதித்தாலோ தாக்கினாலோ, 3 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரைதண்டனை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

    சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி மசோதாவை ஆதரித்து பேசினார். நமது பொறுப்பு இத்துடன் முடிந்துவிட வில்லை என்று கூறிய அவர், சுகாதாரப் பணியாளர்களுக்கு பிபிஇ உடை வழங்கப்பட வேண்டும், வேலை நேரம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும், சரியான நேரத்தில் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆஷா தொழிலாளர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஷ்டிரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் ஜா பேசும்போது, நாம் நோயுடன் போராடவில்லை, சொந்த மக்களுடன் போராடுகிறோம் என்று வேதனை தெரிவித்தார்.

    ‘பீகாரில், தொழிலாளர்கள் கொரோனா கேரியர்கள் என்று அழைக்கப்பட்டனர். அது சமூகத்தில் பரவிய விஷம். அது எவ்வாறு தீர்க்கப்படும் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த சட்டம் தொற்றுநோய் அல்லது ஆபத்தான தொற்றுநோயை வரையறுக்கவில்லை. பல மாதங்களாக, சுகாதாரப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை, செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கை தட்டுவது, மணி அடிப்பது மற்றும் பூக்களை தூவுவது வெறும் அடையாளங்கள் தான். ஆனால் பிற நடவடிக்கைகளும் தேவை’ எனவும் மனோஜ் ஜா கூறினார்.

    தேசியவாத காங்கிரஸ் எம்பி வந்தனா சவான் பேசுகையில் மருத்துவ பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் ஊழியர்களும் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சம்பளம் இன்றி வேலை பார்க்கும் ஆஷா தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதேசமயம், நோயாளிகளின் உறவினர்கள் ஏன் கிளர்ந்தெழுகிறார்கள் என்பதை நாம் முயற்சி செய்து புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    நீண்ட விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×