search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏ.வி.தர்மாரெட்டி தமிழக கவர்னர் பன்வாரிலாலுக்கு லட்டு பிரசாதம் வழங்கியபோது எடுத்தபடம்.
    X
    ஏ.வி.தர்மாரெட்டி தமிழக கவர்னர் பன்வாரிலாலுக்கு லட்டு பிரசாதம் வழங்கியபோது எடுத்தபடம்.

    திருப்பதியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சாமி தரிசனம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சாமி தரிசனம் செய்தார். திருமலையில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வதால் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும், என அவர் கூறினார்.
    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு திருமலைக்கு வந்தார். அவர், திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி இரவு ஓய்வெடுத்தார். அவர், நேற்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். கோவிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் கவர்னருக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமி படம் ஆகியவற்றை தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் வழங்கினார்.

    வேதப்பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர். பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த திருமலையில் உள்ள நாத நீராஞ்சன மண்டபத்தில் சுந்தர காண்டம் பாராயணம் நடந்து வருகிறது. 100-வது நாளான நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று சுந்தர காண்டம் பாராயணம் செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தது எனது வாழ்நாளில் மகிழ்ச்சியான நாள். தேவஸ்தான திட்டங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பக்தர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. திருமலை எப்போதும் சுத்தமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நாடு முழுவதும் பல கோவில்களுக்கு சென்று வந்துள்ளேன். ஆனால் திருமலையில் உள்ள பக்தி பரவசம் வேறு எங்கும் கிடைக்காது.

    நான், ஆஞ்சநேய பக்தன். நான் தினமும் அனுமன் சாலிஷா படித்து வருகிறேன். ஒருசில நேரத்தில் சுந்தர காண்டம் படிக்கிறேன். திருமலையில் தினமும் சுந்தர காண்டம் பாராயணம் செய்வதால் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் எனக் கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி மற்றும் பலர் உடனிருந்தனர். முன்னதாக திருமலை மற்றும் கோவிலுக்கு வந்த தமிழக கவர்னரை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், கோவில் அதிகாரிகள் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.
    Next Story
    ×