search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்
    X
    பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்

    உத்தரபிரதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளாகும் முன்னாள் படைவீரர்களிடமெல்லாம் பாதுகாப்புத்துறை மந்திரி பேசுவதில்லை - சஞ்சய் ராவத் காட்டம்

    உத்தரபிரதேசத்தில் முன்னாள் படைவீரர்கள் எத்தனைபேர் தாக்கப்படுகிறார்கள்? அவர்களிடமெல்லாம் பாதுகாப்புத்துறை மந்திரி பேசுவதில்லை என சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
    மும்பை:

    கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மதன் சர்மா என்பவர் மகாராஷ்டிராவில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அப்போது அவரின் வீட்டுக்குள் புகுந்த ரவுடிகள் அவரை இழுத்து சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயில் கேலி சித்திரத்தை பதிவிட்டு அவரை விமர்சித்து சமூக ஊடகத்தில் வெளியான பதிவை வாட்ஸ்அப்பில் பகிர்ந்ததற்காக சிவசேனா கட்சி நிர்வாகிகள் அவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

    இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சிவசேனா தலைமையினான 
    உத்தவ் தாக்கரே அரசை எதிர்கட்சியான பாஜக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. 

    மேலும், தாக்குதலுக்கு உள்ளான முன்னாள் கடற்படை அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அவருக்கு ஆறுதல் கூறினார். மேலும், முன்னாள் கடற்படை அதிகாரி மீதான தாக்குதல் ஏற்கொள்ள முடியாதது எனவும் இது மோசமான நிகழ்வு எனவும் தெரிவித்தார். 

    இது ஒருபுறமிருக்க மும்பை நகரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசிய நடிகை கங்கனா ரணாவத்திற்கும் மகாராஷ்டிரா அரசுக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது.

    கங்கனாவின் அலுவலகத்தின் ஒரு பகுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்ததால் அந்த பகுதியை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளினர். இதனால் முதல்மந்திரி உத்தவ் தாக்கரே அரசு மீது கங்கனா கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். மேலும், தனது அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்டது தொடர்பாக மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை நடிகை கங்கனா இன்று சந்தித்தார். 

    கங்கனா-சஞ்சய்

    இந்நிலையில், முன்னாள் கடற்படை வீரர் தாக்குதல் சம்பவம், கங்கனா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது:-    
       
    மகாராஷ்டிரா மிகப்பெரிய மாநிலம். இது போன்ற சம்பவங்கள் (முன்னாள் கடற்படை வீரர் தாக்குதல்) யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். உத்தரபிரதேச மாநிலத்தில் முன்னாள் படைவீரர்கள் எத்தனைபேர் தாக்கப்படுகின்றனர் என்று தெரியுமா? அவர்களிடமெல்லாம் தொலைபேசியில் பாதுகாப்புத்துறை மந்திரி பேசுவதில்லை. 

    எந்த ஒரு அப்பாவியும் தாக்கப்படக்கூடாது என்பதில் எங்கள் அரசு நம்பிக்கையாக உள்ளது. மகாராஷ்டிராவில் சட்டம் எப்போதும் மதிக்கப்படும். கட்சி பாகுபாடு இன்றி குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

    கங்கனா ரணாவத் விவகாரத்தை பொறுத்தவரை அதைப்பற்றி பேசுவதை நாங்கள் நிறுத்திவிட்டோம். ஆனால் இந்த விஷயத்தில் அனைத்து செயல்பாடுகளையும் நாங்கள் கவனித்துக்கொண்டு இருக்கிறோம். 

    எந்த அரசியல் கட்சி, எந்த தனிநபர் நமது சிறப்புவாய்ந்த மாநிலத்தை பற்றி எவ்வாறு நினைக்கிறார்கள் என்று நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

    வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சீன-இந்திய எல்லைப்பிரச்சனை, ஜிஎஸ்டி, அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளேன்.

    என அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×