search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் மத்திய மந்திரி ரகுவன்ஷ் சிங்
    X
    முன்னாள் மத்திய மந்திரி ரகுவன்ஷ் சிங்

    100 நாள் வேலை திட்டத்தின் தந்தை... முன்னாள் மத்திய மந்திரி ரகுவன்ஷ் சிங் காலமானார்

    முன்னாள் மத்திய மந்திரியும் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்தியவருமான முன்னாள் மத்திய மந்திரி ரகுவன்ஷ் பிரசாத் சிங் இன்று மரணம் அடைந்தார்.
    புதுடெல்லி:

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவருமான ரகுவன்ஷ் பிரசாத் சிங் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் ரகுவன்ஷ் பிரசாத் சிங் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 74.

    அவரது மறைவுக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஊரக வளர்ச்சித்துறை மந்திரியாக பதவி வகித்த இவர், கிராமப்புற வளர்ச்சிக்காக பல திட்டங்களை முன்னின்று கொண்டு வந்தவர். அதில் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் முக்கிய திட்டமான, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் ஆகும். அதாவது 100 நாள் வேலை திட்டம்.

    லாலு பிரசாத் யாதவுடன் மிகவும் நெருக்கமான தலைவராக இருந்த ரகுவன்ஷ் பிரசாத் சிங், சமீபத்தில் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு செல்லவிருப்பதாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில்தான் அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. 

    ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்றார். கொனோராவுக்கு பிந்தைய கண்காணிப்பில் இருந்த நிலையில் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×