search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    போதை பொருள் விவகாரம்-பெங்களூரு நகை வியாபாரி வைபவ் ஜெயின் கைது

    போதை பொருள் விவகாரத்தில் பெங்களூருவை சேர்ந்த நகை வியாபாரியான வைபவ் ஜெயின் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர்.
    பெங்களூரு:

    பெங்களூருவில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கன்னட சின்னத்திரை நடிகை அனிகா, அவரது கூட்டாளிகள் ரவீந்திரன், அனூப் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு இருந்தார்கள். அவர்களிடம் விசாரித்த போது கன்னட திரையுலகில் போதை பொருள் பயன்பாடு இருப்பது பற்றிய தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய தீவிர விசாரணையை தொடர்ந்து போதை பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதை பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட பிரபல நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, இவர்களது நண்பர்கள் ரவிசங்கர், ராகுல், போதை பொருள் விற்பனையாளர்கள் வீரேன் கண்ணா, தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த லோயம் பெப்பர் சம்பா, பிரதீக் ஷெட்டி, நயாஷ், பிரசாந்த் ரங்கா ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து இருந்தனர். இவர்கள் 9 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கைதான ரவிசங்கரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதாவது நடிகை ராகிணி திவேதியுடன் சேர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட ரவிசங்கர், ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே பண்ணை வீட்டில் நடந்த தொழில்அதிபர் மகள் பிறந்தநாள் விருந்திலும், பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்திலும் ராகிணி திவேதி, பெங்களூருவை சேர்ந்த நகை வியாபாரி வைபவ் ஜெயினுடன் சேர்ந்து தானும் போதைப்பொருட்களை பயன்படுத்தியதையும் ரவிசங்கர் ஒப்புக்கொண்டு இருந்தார். இதையடுத்து வைபவ் ஜெயினை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டினார்கள். ஆனால் அவர் கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்றதால் அவரை போலீசார் கைது செய்யவில்லை.

    இந்த நிலையில் கொரோனாவில் இருந்து வைபவ் ஜெயின் மீண்டு விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெங்களூரு வயாலிகாவலில் உள்ள வீட்டில் வைத்து நேற்று அதிகாலை வைபவ் ஜெயினை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் இந்த வழக்கில் 5-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    இதற்கிடையே போதை பொருள் விவகாரத்தில் பெங்களூருவை சேர்ந்த ஆதித்யா அகர்வால் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் இந்த வழக்கில் 6-வது குற்றவாளியாக ஆதித்யா அகர்வாலின் பெயர் காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் சேர்க்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அரியானா மாநிலத்தில் பதுங்கி இருந்த ஆதித்யா அகர்வாலை நேற்று முன்தினம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து இருந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதாவது ஆதித்யா அகர்வால், வீரேன் கண்ணாவின் வலது கை போல செயல்பட்டு வந்து உள்ளார். பெங்களூருவில் உல்லாச விருந்து நிகழ்ச்சிகளை வீரேன் கண்ணாவும், ஆதித்யா அகர்வாலும் சேர்ந்து தான் தயார் செய்து வந்து உள்ளனர். வீரேன் கண்ணா இல்லாத நேரத்தில் விருந்துகளுக்கான ஏற்பாடுகளை ஆதித்யா அகர்வால் கவனித்து வந்து உள்ளார்.

    என்ஜினீயரான ஆதித்யா அகர்வால் பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாதம் ரூ.4 லட்சம் சம்பளத்திற்கு வேலை செய்து உள்ளார். ஆனாலும் அவருக்கு இந்த தொகை கட்டுப்படி ஆகாததால் வீரேன் கண்ணாவுடன் சேர்ந்து போதை பொருள் விற்பனையில் இறங்கி உள்ளார். மேலும் போதை பொருள் விற்பனையின் மூலம் 2 வாரத்தில் ரூ.4 லட்சம் வரை ஆதித்யா அகர்வால் சம்பாதித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×