search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    23 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம்

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 23 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 14-ந்தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி வரை 18 நாட்கள் நடைபெறுகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து வேகமெடுத்து வரும் நிலையில் இந்த தொடருக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    விடுமுறை இன்றி குறுகிய கால தொடராக நடத்தப்படும் இந்த நாடாளுமன்ற தொடரில் 23 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதில் 11 மசோதாக்கள், அவசர சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்படும் மசோதாக்கள் ஆகும்.

    இந்த அவசர சட்டத்துக்கான மாற்று மசோதாக்களில் முக்கியமாக கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபடும் சுகாதார மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதலை தடுக்கும் மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி, மேற்படி பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு 7 ஆண்டு சிறையும், ரூ.5 லட்சம் அபராதம் வரை விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது.

    அடுத்ததாக கொரோனா தடுப்பு பணிகளுக்கான நிதிக்காக, ஓராண்டுக்கு எம்.பி.க்களின் சம்பளத்தை 30 சதவீதம் குறைக்க வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் விவசாயிகளின் விளை பொருட்கள் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதாவும் அறிமுகம் செய்யப்படுகிறது.

    இதைப்போல புதிய மசோதாக்களை பொறுத்தவரை, ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதா இந்த தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதாப்படி காஷ்மீரில் உருது மற்றும் ஆங்கிலத்துடன், காஷ்மீரி, டோக்ரி மற்றும் இந்தி ஆகிய மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்கப்படும்.

    மேலும் மனிதர்களே மலம் அள்ளுவதற்கு தடை விதிக்கும் மசோதாவும் இந்த தொடரில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் கழிவு நீர் கால்வாய்களை எந்திரங்கள் மூலம் தூய்மைப்படுத்தவும், அதில் நடைபெறும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்கவும் வழிவகை செய்யப்படும்.

    இந்த மசோதாக்களை தவிர மக்களவையில் 2020-21-ம் ஆண்டுக்கான முதல் தொகுப்பு மானிய கோரிக்கைகளும், 2016-17-ம் ஆண்டுக்கான கூடுதல் மானிய கோரிக்கைகளும் விவாதித்து நிறைவேற்றப்படும் என மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
    Next Story
    ×