search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கங்கனா ரணாவத், உத்தவ் தாக்கரே
    X
    கங்கனா ரணாவத், உத்தவ் தாக்கரே

    உங்கள் ஆணவம் நொறுங்கும்: உத்தவ் தாக்கரே மீது நடிகை கங்கனா ரணாவத் ஆவேசம்

    இன்று எனது வீடு இடிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆணவம் நாளை நொறுங்கும். காலத்தின் சக்கரங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மீது நடிகை கங்கனா ஆவேசமாக தனது கருத்துக்களை தெரிவித்தார்.
    மும்பை :

    நடிகை கங்கனா ரணாவத் மராட்டிய ஆட்சியாளர்களுடன் மோதிக்கொண்ட நிலையில், அவரது பங்களா வீட்டில் சட்விரோத கட்டுமானம் எனக்கூறி பல பகுதிகளை மும்பை மாநகராட்சி இடித்து தள்ளியது. இதற்கு மத்தியில் இமாச்சல பிரதேசத்தில் இருந்து நேற்று மும்பை திரும்பிய கங்கனா, தனது வீடு இடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதனை அடுத்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை தாக்கி பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது:-

    முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அவர்களே, நீங்கள் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்? திரைப்பட மாபியாக்களுடன் இணைந்து எனது வீட்டை இடித்ததன் மூலம், என்னை பழிவாங்கி விட்டதாக நினைக்கிறீர்கள். இன்று எனது வீடு இடிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆணவம் நாளை நொறுங்கும். காலத்தின் சக்கரங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வீடு இடிக்கப்பட்டபோது நடிகை கங்கனா மும்பை திரும்பிக்கொண்டு இருந்தார். வரும் வழியில் அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “நான் ஒருபோதும் தவறு செய்யவில்லை. என் மும்பை இப்போதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பதை எனது எதிரிகள் மீண்டும், மீண்டும் நிரூபிக்கிறார்கள்” என்று சாடினார்.

    இதேபோல் தனது வீட்டில் மாநகராட்சி அதிகாரிகள் நிற்கும் புகைப்படத்துடன் “பாபரும் அவரது ராணுவமும்” என்ற தலைப்பில் வெளியிட்ட பதிவில், “பாபர் இங்கு வந்துள்ளார். வரலாறு மீண்டும் நிகழ்ந்துள்ளது. ராமர் கோவில்(வீடு) மீண்டும் இடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாபரே ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

    இந்த கோவில் மீண்டும் கட்டப்படும். ஜெய் ஸ்ரீ ராம். நான் சத்ரபதி சிவாஜியின் மகள். எனது மரியாதை மற்றும் கண்ணியத்திற்காக போராடுவேன்” என கூறியுள்ளார்.

    இதேபோல் மற்றொரு பதிவில், மும்பையில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளின் புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்ட அவர், “மும்பை மாநகராட்சி அதிகாரிகளே இது மும்பையில் உள்ள சாலைகள். நீங்கள் இதுகுறித்து கவலைப்படவில்லை. ஆனால் நீங்கள் கவனம் செலுத்துவது, மாபியாக்களை அம்பலப்படுத்தும் ஒரு நடிகையின் வீட்டை இடிப்பதில் தான்” என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×