search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம்

    பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் யோசனைகள்

    பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டுவதற்கு மத்திய அரசுக்கு முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் யோசனைகளை கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலை இழப்புகள், தொழில், வர்த்தக இழப்புகளால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து விட்டது.

    இதன் காரணமாக நலிவுற்றுள்ள பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டுவதற்கு உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட வேண்டும், ஜி.எஸ்.டி. அமல்படுத்தியபோது, அளித்த வாக்குறுதியின்படி மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இது தொடர்பாக நேற்று அவர் மத்திய அரசுக்கு டுவிட்டர் வழியாக யோசனைகளை கூறி உள்ளார். அவை வருமாறு:-

    தேவையையும், பயன்பாட்டையும் தூண்டுவதற்கும், பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டவும் இதோ சில உறுதியான நடவடிக்கைகள்-

    * மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள 50 சதவீத குடும்பங்களின் கைகளில் பணத்தை கொடுங்கள்.

    * அனைத்து குடும்பங்களுக்கும் உணவு தானியங்களை வழங்குங்கள். தேவைப்படுவோர் அவற்றை பெற்றுக்கொள்வார்கள்.

    * உணவு தானிய கையிருப்பை பயன்படுத்தி கூலியை வழங்குங்கள். பாரம்பரியமான பொதுப்பணிகளை தொடருங்கள்.

    * கடன் வழங்க ஏதுவாக வங்கிகளுக்கு மறுமூலதனம் வழங்குங்கள். மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப் பீட்டு தொகையை வழங்குங்கள்.

    இவை எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்படும். கடன் வாங்குங்கள். இதற்கு தயங்காதீர்கள். பணத்தை திரட்டுவதற்கான சில உறுதியான வழிகள் இதோ-

    * எம்.ஆர்.பி.எம். என்னும் நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்ட விதிமுறைகளை தளர்த்துங்கள். இந்த ஆண்டு கூடுதல் கடன் வாங்குங்கள்.

    * முதலீடு செய்வதை துரிதப்படுத்துங்கள். சர்வதேச நிதியம், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்டவற்றின் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.48 ஆயிரத்து 750 கோடி) சலுகையை பயன்படுத்துங்கள். கடைசி முயற்சியாக பற்றாக்குறையின் ஒரு பகுதியை பணமாக்குங்கள்.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
    Next Story
    ×