search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா
    X
    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

    கேரளாவில் கண்டெய்னர் லாரியில் கடத்தி வந்த 500 கிலோ கஞ்சா பறிமுதல்

    கேரளாவில் கலால் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள உலர் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவதாக கலால்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருவனந்தபுரம் மாவட்டம் அட்டிங்கல் அருகே கலால் துறையின் சிறப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கண்டெய்னர் லாரியை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். 

    அப்போது, லாரிக்குள் 500 கிலோ உலர் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பண்டல் பண்டலாக பார்சல் செய்யப்பட்டிருந்த கஞ்சாவை கலால்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு சுமார் 20 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. 

    கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அந்த கஞ்சா மைசூருவில் இருந்து கொண்டு வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    மைசூருவில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால், கேரளாவிற்கு கஞ்சாவை  விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
    Next Story
    ×