search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாமுவேல் மிராண்டாவை விசாரணைக்கு அழைத்து சென்ற காட்சி
    X
    சாமுவேல் மிராண்டாவை விசாரணைக்கு அழைத்து சென்ற காட்சி

    நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் திருப்பம்: முன்னாள் உதவியாளர் சாமுவேல் மிராண்டாவிடம் தீவிர விசாரணை

    நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் போதைப்பொருள் கோணத்திலும் விசாரித்து வரும் போலீசார், சுஷாந்தின் முன்னாள் உதவியாளர் சாமுவேல் மிராண்டாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    மும்பை:

    இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது, பண மோசடியில் ஈடுபட்டதாக அவரின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

    மேலும் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரித்தது. அமலாக்கத்துறையின் விசாரணையின் போது ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது குறித்து என்.சி.பி. எனப்படும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் ரியா மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை போதைப்பொருள் வழக்குடன் தொடர்புபடுத்தி விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது சுஷாந்த் சிங் வீட்டில் ஹவுஸ்கீப்பிங் மேனேஜராக பணியாற்றிய சாமுவேல் மிராண்டா ஆகியோரின் வீடுகளில் இன்று போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். பின்னர் சாமுவேல் மிராண்டாவை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மிராண்டாவை கடந்த ஆண்டு மே மாதம் சக்கரபோர்த்தி நியமித்துள்ளார். வீட்டு செலவுகள் அனைத்தையும் அவரே நிர்வகித்து வந்துள்ளார். சுஷாந்த் சிங்கின் பணத்தை பறிப்பதற்கும் போதைப்பொருட்களை வழங்குவதற்கும் ரியாவுக்கு மிராண்டா உதவியதாக சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சுஷாந்த் சிங் மரண வழக்கில் போதைப்பொருள் கோணத்திலும் விசாரித்து வரும் போலீசார், இதுவரை 5 பேரை கைது செய்துள்ளனர். சமீபத்தில் கைது செய்யப்பட்ட உணவக உரிமையாளர் ஜாயித் விலாத்ராவை வருகிற 9-ந் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு மும்பை கோர்ட் அனுமதி வழங்கி உள்ளது. இந்த விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தி திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து இருப்பதாக சமீபகாலமாக சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த வழக்கின் மூலம் திரையுலகை சேர்ந்த பலர் போதைப்பொருள் வழக்கில் சிக்கலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
    Next Story
    ×