search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி
    X
    குமாரசாமி

    சுற்றுலா மந்திரி சி.டி.ரவி அதிகார போதையில் மிதக்கிறார்: குமாரசாமி காட்டம்

    சுற்றுலாத்துறை மந்திரி சி.டி.ரவி, குமாரசாமி போதையில் பேசுகிறாரா என்பதை அறிய அவருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்று குமாரசாமி காட்டமாக கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் தனது தலைமையிலான காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு, போதைப்பொருள் கும்பலின் பணத்தை பயன்படுத்தி கவிழ்க்கப்பட்டதாக குமாரசாமி நேற்று முன்தினம் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதை பா.ஜனதா மறுத்துள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த சுற்றுலாத்துறை மந்திரி சி.டி.ரவி, குமாரசாமி போதையில் பேசுகிறாரா என்பதை அறிய அவருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்று காட்டமாக கூறினார். இதற்கு பதிலளித்து குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சுற்றுலாத்துறை மந்திரி சி.டி.ரவி அதிகார போதையில் மிதக்கிறார். அதனால் முதலில் அவரை அவசரமாக பரிசோதனைக்கு உட்படுவது நல்லது. நான் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி எப்போதும் சமநிலையிலேயே இருக்கிறேன். அதிகார போதை சிலருக்கு மட்டும் ஏறிவிடுகிறது. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது கிரிக்கெட் சூதாட்டம், போதைப்பொருள் நடமாட்டம், கந்து வட்டி போன்றவற்றை கட்டுப்படுத்த தனிப்படையை அமைத்தேன்.

    இதனால் பயந்துபோன அந்த கும்பல், இலங்கை மற்றும் மும்பைக்கு ஓடிவிட்டது. அதன் பிறகு இங்குள்ள எம்.எல்.ஏ.க்களை மும்பைக்கு அழைத்து சென்றபோது, அவர்களுடன் அந்த கும்பல் சேர்ந்து கொண்டது. சி.டி.ரவி மற்றவர்களை பேசுவது போல் என்னை பேசினால் நான் அமைதியாக இருக்க மாட்டேன். அதிகாரத்தில் இருக்கும் மந்திரி, கட்டுப்பாட்டுடன் பேசுவது நல்லது.

    கிரிக்கெட் சூதாட்டம், போதைப்பொருள் கும்பலை பயன்படுத்தியே எங்கள் ஆட்சியில் இருந்த எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி இழுத்தனர் என்பது ரகசியமானது இல்லை. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் சிலரை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை தனி விமானம் மூலம் மும்பைக்கு அழைத்து சென்றது யார் என்பது ஒட்டுமொத்த மாநிலத்திற்கே தெரியும். போதைப்பொருள் கும்பலின் பாவத்தின் பணத்தை பயன்படுத்தி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் நபர் நானல்ல. அத்தகைய மோசமான நிலைக்கு நான் இறங்குவதாக இருந்திருந்தால், எனது தலைமையிலான கூட்டணி ஆட்சியை யாரும் ஆட்டி பார்த்திருக்க முடிந்திருக்காது.

    அரசின் கஜானாவில் பணம் சேர்த்து விவசாய கடனை தள்ளுபடி செய்தவன் நான். கொள்ளையடித்தவர்கள் அதிகார போதையில் வாய்க்கு வந்தபடி பேசுவதை கேட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்த இந்த பா.ஜனதா அரசுக்கு இயற்கை ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. மக்களின் நிறை-குறைகளை தீர்க்க நேர்மையான முறையில் செயல்படுங்கள். அதை விடுத்து வாய்க்கு வந்தபடி பேசும் அதிகார போதை நீண்டகாலம் நீடிக்காது.

    இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×