search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் டாக்டர் கபீல் கான்
    X
    சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் டாக்டர் கபீல் கான்

    நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் - சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் டாக்டர் கபீல் கான்

    தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த டாக்டர் கபீல் கானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து அவர் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் உயிரிழந்தன. இந்த விவகாரம் தொடர்பாக டாக்டர் கபீல் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

    இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கபீல் கான் குற்றமற்றவர் என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 9 மாதங்களாக சிறையில் இருந்த கபீல் கான் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இதற்கிடையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக உத்தரபிரதேச போலீசார் கபீல் கானை கடந்த ஜனவரி மாதம் மீண்டும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட கபீல் கான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் மதுராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். 

    இதையடுத்து தனது மகன் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டாக்டர் கபீல் கானின் தாயார் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். 

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை பல மாதங்களாக நடைபெற்று வந்தது. 

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று நடந்த விசாரணையின் போது அலிகார் பல்கலைக்கழகத்தில் கபீல் கான் பேசியது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலோ, அல்லது வன்முறையை தூண்டும் வகையிலோ இல்லை என்றும் மாறாக தேசிய ஒருமைப்பாட்டையும், நாட்டுமக்களிடையை ஒற்றுமையையும் ஏற்படுத்தும் வகையிலேயே இருந்ததாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

    மேலும், டாக்டர் கபீல் கான் மீது தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. சிறையில் உள்ள டாக்டர் கபீல் கானை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவையடுத்து கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு 7 மாதங்கள் உத்தரபிரதேசத்தின் மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த டாக்டர் கபீல் கான் இன்று விடுதலை செய்யப்பட்டார்.  
    Next Story
    ×