search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி ஹர்ஷவர்தன்
    X
    மந்திரி ஹர்ஷவர்தன்

    கர்நாடகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க பரிசீலனை: மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தகவல்

    கர்நாடகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குவது குறித்த ஆலோசனை, மத்திய நிதித்துறையின் தீவிர பரிசீலனையில் உள்ளது என்பது எனக்கு தெரியும். அந்த நாள் விரைவில் வரும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    பல்லாரியில் உள்ள விஜயநகர் மருத்துவ அறிவியல் கல்லூரியில் பல்நோக்கு விபத்து பிரிவு தொடக்க விழா காணொலி மூலம் நேற்று நடைபெற்றது. பெங்களூருவில் இருந்தபடி முதல்-மந்திரி எடியூரப்பா கலந்துகொண்டு, அந்த பிரிவை தொடங்கி வைத்தார். இதில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

    கர்நாடகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குவது குறித்த ஆலோசனை, மத்திய நிதித்துறையின் தீவிர பரிசீலனையில் உள்ளது என்பது எனக்கு தெரியும். அந்த நாள் விரைவில் வரும். நாட்டில் சுகாதார சேவைகள் அதிகரித்து இருப்பதில் மறைந்த சுஷ்மா சுவராஜின் பங்கு மிக முக்கியமானது. அவர் வாஜ்பாய் ஆட்சியில் சுகாதாரத்துறை மந்திரியாக பணியாற்றினார்.

    கடந்த 2003-ம் ஆண்டு நாட்டில் ஒரு எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இருந்தது. அதன் பிறகு 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. அதன் பிறகு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரேபரேலியில் மேலும் ஒரு ஆஸ்பத்திரி திறக்கப்பட்டது. 2014-ம் ஆண்டுக்கு பிறகு பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. 3-வது கட்ட திட்டத்தின் கீழ் நாட்டில் புதிதாக 75 மருத்துவ கல்லூரிகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் உதவியுடன் கர்நாடகத்தில் சிக்கமகளூரு, ஹாவேரி, யாதகிரி, சிக்பள்ளாப்பூரில் மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் மந்திரிகள் கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். கர்நாடகம் பின்பற்றிய கொரோனா தடுப்பு பணிகளை பிற மாநிலங்களும் செயல்படுத்துகின்றன. பிற மாநிலங்களுடன் நடந்த கூட்டத்தில் இதுபற்றி நான் பேசியுள்ளேன்.

    இவ்வாறு ஹர்ஷவர்தன் பேசினார்.

    முதல்-மந்திரி எடியூரப்பா பேசுகையில், “கலபுரகியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் கல்லூரியை மத்திய அரசே எடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையை போல் மேம்படுத்த வேண்டும். கலபுரகி பின்தங்கிய மாவட்டம். இந்த இ.எஸ்.ஐ. மருத்துவமனையை மேம்படுத்துவதன் மூலம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பயன் பெறுவார்கள். கடந்த 6 ஆண்டுகளில் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து பிரிவு, பிரதமர் ஸ்வஸ்த்ய சுரக்‌ஷா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்பில் ரூ.150 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது“ என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர், பல்லாரியில் வனத்துறை மந்திரி ஆனந்த்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×