search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இந்தியர் கைது

    பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குஜராத்தை சேர்ந்த உளவாளி கைது செய்யப்பட்டார்.
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது ர‌ஷித். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., பாகிஸ்தான் ராணுவம் ஆகியவற்றுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம், உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு படையால் கைது செய்யப்பட்டார். முகமது ர‌ஷித் மீது லக்னோ கோமதிநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    பின்னர், இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

    இந்தியாவில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம்வாய்ந்த நிலையங்களின் புகைப்படங்களையும், ராணுவ படைகளின் நடமாட்டம் குறித்த தகவல்களையும் முகமது ர‌ஷித் பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ., ராணுவ அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர் பாகிஸ்தானுக்கு 2 தடவை சென்று வந்ததும் தெரியவந்தது.

    முகமது ர‌ஷித்திடம் துருவித்துருவி விசாரணை நடத்தியதில், குஜராத் மாநிலம் முந்த்ரா மாவட்டத்தை சேர்ந்த ரஜக்பாய் கும்பார் என்பவரும் பாகிஸ்தான் உளவுப்படைக்காக உளவாளியாக செயல்பட்டு வருவது தெரிய வந்தது.

    அவர் முந்த்ரா மாவட்டத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

    பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்களின் புகைப்படங்களை அனுப்பி வைத்ததற்காக, முகமது ர‌ஷித்துக்கு ரூ.5 ஆயிரம் வழங்குமாறு ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் ரஜக்பாய் கும்பாருக்கு உத்தரவிட்டனர்.

    அதன்படி, ‘பேடிஎம்’ மூலமாக ரிஸ்வான் என்பவரின் கணக்கில் ரஜக்பாய் கும்பார் ரூ.5 ஆயிரம் அனுப்பி வைத்ததும், அப்பணம் முகமது ர‌ஷித்திடம் ஒப்படைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த தகவல்களின் அடிப்படையில், ஐ.எஸ்.ஐ. உளவாளியான ரஜக்பாய் கும்பாரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
    Next Story
    ×