search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
    X
    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

    முதியோரின் பிரச்சினைகளை தீர்க்க வலுவான குறைதீர்ப்பு முறை தேவை - வெங்கையா நாயுடு யோசனை

    முதியோர் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலுவான குறைதீர்ப்பு முறை அவசியம் என்று வெங்கையா நாயுடு யோசனை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மூத்த குடிமக்கள், அறிவு களஞ்சியங்கள். அவர்களின் அந்திம காலத்தில், அவர்கள் பாசத்துடனும், அன்புடனும், கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும். இது இளைஞர்கள் உள்பட எல்லோருடைய புனிதமான கடமை ஆகும். நம் நாட்டில் உள்ள முதியோர் இல்லங்கள், சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உணர்த்துவதுடன், குடும்ப பண்புகள் சீரழிந்து வருவதை பிரதிபலிக்கின்றன.

    கலாசாரம், பண்பாடு, பாரம்பரியத்தை பாதுகாப்பதில் கூட்டு குடும்பமுறை ஆற்றி வரும் பணியை இன்றைய வாழ்க்கைமுறை சீரழித்து விட்டது. இந்த நேரத்தில் கூட்டு குடும்பமுறையில் நமது நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். கூட்டு குடும்பத்தில் சமூக பாதுகாப்பு உள்ளது.

    கூட்டு குடும்பங்களில், குழந்தைகள் தங்களது தாத்தா-பாட்டியுடன் பாசப்பிணைப்பை உருவாக்கிக்கொள்வதுடன், அவர்களது வழிகாட்டுதலையும் பெறுகிறார்கள். பதிலுக்கு முதியோரும், இளைய தலைமுறையிடம் அன்பையும், ஆதரவையும் பெறுகிறார்கள். இது ஒரு கூட்டு கடமை.

    முதியோர்கள் சவுகரியமான, மகிழ்ச்சியான, திருப்திகரமான வாழ்க்கை வாழ்வதற்காக, குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை பெற்றோர் கற்றுத்தர வேண்டும்.

    மக்கள்தொகையை விட வேகமாக முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்குள், இந்திய மக்கள்தொகையில் முதியோர் எண்ணிக்கை 20 சதவீதமாகி விடும். முதியோர்களில் பெரும்பாலானோர் தனிமையாகவோ அல்லது நிதிதேவைக்கு பிள்ளைகளை சார்ந்தோ வாழ்ந்து வருகிறார்கள்.

    குடும்ப நெருக்கடியாலும், சிறிய வீடுகளில் வசிப்பதாலும் பலர் தங்கள் பெற்றோரை சொந்த ஊரிலேயே விட்டு விடுகிறார்கள். முதியோருக்காக அரசுகள் எத்தனையோ திட்டங்களையும், கொள்கைகளையும் அறிவித்தாலும், அவற்றை பெறுவதில் முதியோர் சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது.

    முதியோர் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலுவான குறைதீர் முறை அவசியம் ஆகும். வங்கி, அரசு அலுவலகம், பஸ், ரெயில் போன்றவற்றில் முதியோர் நீண்ட நேரம் நிற்க வேண்டியதாகி விடுகிறது. இவற்றில் போதிய கவனம் செலுத்தப்படுவது இல்லை.

    நாடாளுமன்றத்தில் கூட முதியோர் பிரச்சினை குறித்து ஆண்டுக்கு சராசரியாக 30-க்கும் குறைவான கேள்விகளே கேட்கப்படுகின்றன.

    இவ்வாறு வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
    Next Story
    ×