search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மசூத் அசார்
    X
    மசூத் அசார்

    புல்வாமா தாக்குதல் வழக்கில் பொறுப்பை தட்டிக்கழிப்பதா? - பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்

    புல்வாமா தாக்குதல் வழக்கில் பொறுப்பை தட்டிக்கழிப்பதாக பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி கா‌‌ஷ்மீரில் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனம் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்‌‌ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில், 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியானார்கள்.

    இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் பாலகோட் என்ற இடத்தில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய போர் விமானங்கள் தாக்கி அழித்தன.

    புல்வாமா தாக்குதல் வழக்கில், தேசிய புலனாய்வு முகமை இந்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ஜெய்‌‌ஷ் இ முகமது தலைவர் மசூத் அசார் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஒன்றரை ஆண்டுகால விசாரணைக்கு பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஜெய்‌‌ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

    அந்த இயக்கமும், அதன் தலைவர்களும் பாகிஸ்தானில்தான் உள்ளனர். முதல் குற்றவாளியான மசூத் அசாருக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அடைக்கலம் அளித்து வருவது வருந்தத்தக்கது.

    புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானுக்கு இந்தியா அளித்துள்ளது. ஆனாலும், தனது பொறுப்பை பாகிஸ்தான் தட்டிக்கழித்து வருகிறது. இதுபோல், 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீதும் பாகிஸ்தான உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    தாவூத் இப்ராகிம் வி‌‌ஷயத்தில் பாகிஸ்தான் திடீரென ‘பல்டி’ அடித்துள்ளது. பயங்கரவாத இயக்கங்கள் மீதோ, தேடப்படும் தனிநபர்கள் மீதோ பாகிஸ்தான் நம்பகமான எந்த நடவடிக்கையும் எடுத்தது இல்லை.

    பாகிஸ்தானின் மறுப்பு, அதன் நோக்கத்தை கேள்விக்குறி ஆக்குகிறது. உலகத்தை திசைதிருப்ப முடியாது. இனியாவது நம்பகமான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்க வேண்டும்.

    இந்திய-சீன எல்லையில் முழு அமைதியை திரும்பச்செய்வது என்று இரு நாடுகளுக்கிடையே கடந்த முறை நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கிழக்கு லடாக் பகுதியில் படைகளை முழுமையாக விலக்குவதற்கு, இருதரப்பும் ஒப்புக்கொண்ட பரஸ்பர நல்லிணக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம்.

    இரு நாட்டு படைகளும் அவரவர் ஏற்கனவே இருந்த நிலைகளுக்கு திரும்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×