search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆன்லைன் கல்வி
    X
    ஆன்லைன் கல்வி

    ஆன்லைன் கல்வி கற்க 24 சதவீத குடும்பங்களில்தான் இணைய வசதி இருக்கிறது - யுனிசெப் அமைப்பு தகவல்

    ஆன்லைன் கல்வி கற்க இந்தியாவில் 24 சதவீத குடும்பங்களில்தான் இணைய வசதி இருப்பதாக ஐ.நா. அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது.
    புதுடெல்லி:

    குழந்தைகள் கல்வி தொடர்பான ஐ.நா. அமைப்பான ‘யுனிசெப்’, கொரோனா காலத்தில் கல்வி சென்றடையும் விகிதம் குறித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. 100 நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட புள்ளி விவரங்களில் இருந்து அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு இருந்தது.

    அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்த கொரோனா காலத்தில், ஆன்லைன் கல்வி கற்பதற்கு இந்தியாவில் வெறும் 24 சதவீத குடும்பங்களில்தான் இணைய வசதி இருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. கிராமம்-நகரம் இடையிலும், ஆண்-பெண் இடையிலும் வேறுபாடு நிலவுகிறது.

    உயர்வருவாய், நடுத்தர வருவாய் குடும்பங்களுக்கும், குறைந்த வருவாய் குடும்பங்களுக்கும் இடையிலான கற்றல் இடைவெளி இன்னும் அதிகரித்துள்ளது. பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு கற்றல் வசதி கிடைக்கவில்லை.

    நலிந்த குடும்பத்து குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. அப்படியே கிடைத்தாலும், இணைய வசதி சுமாராக இருக்கிறது.

    இந்தியா முழுவதும் 15 லட்சம் பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிவரை 28 கோடியே 60 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிப்பேர் பெண் குழந்தைகள் ஆவர்.

    இத்தகைய குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்கும்வகையில் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாயம், பெற்றோர், தன்னார்வ தொண்டர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×