search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்
    X
    ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

    மாநிலங்களின் வருவாய் இழப்பு பற்றி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு மற்றும் அதை ஈடுகட்டுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இந்த வரிவிதிப்பு முறையால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டால், ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) சட்டத்தின்படி அது ஈடுகட்டப்படும் என்று அப்போது உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

    மத்திய நிதி மந்திரி தலைமையிலான ஜி.எஸ்.டி. கவுன்சில் அவ்வப்போது கூடி ஆலோசனை நடத்தி வருகிறது.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக தொழில்கள் பாதிக்கப்பட்டு, மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்து உள்ளது.

    இந்த நிலையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 41-வது கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று காணொலி காட்சி மூலம் 5 மணி நேரம் நடைபெற்றது. இதில் மாநில நிதி மந்திரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கூட்டத்தில் பங்கேற்றார்.

    கூட்டத்தில் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வரி வருவாய் இழப்பு குறித்தும், அதை ஈடுகட்டுவது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கூட்டணியில் இல்லாத கட்சிகளின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் பிரதிநிதிகள் பேசுகையில், மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை சரிக்கட்டுவது மத்திய அரசின் சட்ட ரீதியான கடமை ஆகும் என்று கூறினார்கள். மேற்கு வங்காளம், பஞ்சாப், கேரளா, டெல்லி மாநிலங்களின் பிரதிநிதிகள் இந்த கருத்தை வலியுறுத்தி கூறினார்கள்.

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், கொரோனா தொற்று காரணமாக நடப்பு ஆண்டில் ஜி.எஸ்.டி. வசூல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். வரி வருவாய் இழப்பீடு வழங்குவது தொடர்பாக அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் கருத்தையும் அவர் சுட்டிக் காட்டினார்.

    மேலும், வருவாய் இழப்பை சரிக்கட்ட மாநிலங்கள் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசின் சார்பிலும் பாரதீய ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் சார்பிலும் யோசனை தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி வெளிச்சந்தையில் கடன் பெறுவது, கூடுதல் வரி விதிப்பது, ஈட்டு வரியின் கீழ் மேலும் பல பொருட்களை கொண்டு வருவது உள்ளிட்ட அம்சங்கள் பற்றி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டம் முடிந்ததும் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கொரோனா தொற்று பாதிப்பால் இந்த நிதி ஆண்டில் இழப்பீடு பாக்கி ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களுக்கான இழப்பீடு பாக்கி தொடர்பாக மாநிலங்களிடம் இரு யோசனைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. கடன் பெறுவதில் உள்ள சிரமங்களை போக்குவது தொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் கலந்து பேச ஏற்பாடு செய்யப்படும் என்று கூறி இருக்கிறோம். இதுகுறித்து ஆலோசித்து ஒரு வாரத்தில் தெரிவிக்குமாறு மாநிலங்களை கேட்டுக் கொண்டு உள்ளோம்.

    ஜி.எஸ்.டி. வரியை கூட்டுவது பற்றி எதுவும் ஆலோசிக் கப்படவில்லை

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×