search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷர்ஜீல் இமாம்
    X
    ஷர்ஜீல் இமாம்

    டெல்லி வன்முறை தொடர்பான வழக்கில் ஷர்ஜீல் இமாமை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

    டெல்லியில் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் தொடர்புடைய ஷர்ஜீல் இமாமை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
    புதுடெல்லி:

    குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி மற்றும்
    அலிகார் பல்கலைகழகத்தில் டிசம்பர் 16-ம் தேதி ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற்ற போராட்டங்களின் போது போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் 
    ஒருவனான ஷர்ஜீல் இமாம் தேசத்திற்கு விரோதமாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். 

    ஜேஎன்யூ பல்கலைகழகத்தின் பிஎச்டி மாணவனான இமாம் ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைகழகத்தில் சிஏஏ-வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, இந்தியாவில் இருந்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை பிரிக்க வேண்டும் என பேசிய சர்ச்சைக்குரிய விடீயோ வெளியானது.

    இந்த வீடியோ வெளியானதையடுத்து ஷர்ஜூல் இமாம் மீது டெல்லி, அசாம்,அருணாச்சலப்பிரதேசம், உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  

    குறிப்பாக நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பீகாரில் பதுங்கி இருந்த இமாமை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இமாம் பின்னர் அசாம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து தேசத்துரோக வழக்கில் கைதான இமாம் அசாம் மாநிலத்தின் கவுகாத்தி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இதற்கிடையில், டெல்லியில் நடைபெற்ற சிஏஏ போட்டத்தின் போது வன்முறையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்தது தொடர்பாக ஷர்ஜீலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை மேற்கொள்ள அசாம் சிறையில் இருந்த அவனை டெல்லிக்கு அழைத்து வர கடந்த மாதம் போலீசார் சென்றனர்.

    கவுகாத்தி சிறையில் இருந்த ஷர்ஜீலுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது அவனுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் டெல்லி அழைத்து வருவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு குணமானதையடுத்து சிஏஏ வன்முறை தொடர்பாக ஷர்ஜீலை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

    மேலும், அவனிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதிக்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரஸ் மூலம் ஷர்ஜீலை போலீசார் ஆஜர்படுத்தினர்.

    டெல்லி வன்முறை தொடர்பாக ஷர்ஜீல் இமாம் மீது பயங்கரவாத தடுப்பு சட்டம், சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஷர்ஜீல் இமாமை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரவேண்டும் என டெல்லி போலீசார் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் ஷர்ஜீலை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    இதையடுத்து, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஷர்ஜீல் இமாம் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டான். அவனிடம் டெல்லி வன்முறை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது


     

    Next Story
    ×