search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் எப்போது?: எடியூரப்பா பதில்

    மந்திரிசபையை விரிவாக்கம் செய்யவும், சில மந்திரிகளை பதவியில் இருந்து நீக்கவும் எடியூரப்பா முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கியதும் மந்திரிசபை மாற்றியமைக்கப்பட உள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து, மந்திரிசபையை விரிவாக்கம் செய்யவும், சில மந்திரிகளை பதவியில் இருந்து நீக்கவும் எடியூரப்பா முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கியதும் மந்திரிசபை மாற்றியமைக்கப்பட உள்ளது.

    இதற்காக முதல்-மந்திரி எடியூரப்பா, டெல்லி சென்று பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேச முடிவு செய்துள்ளார். இந்த நிலையில், வடகர்நாடக மாவட்டங்களில் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட செல்லும் முன்பாக பெங்களூரு ஹாவேரி இல்லத்தில் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம், அடுத்த மாதம் (செப்டம்பர்) 21-ந் தேதிக்கு தொடங்க உள்ள மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுமா? என்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    மந்திரிசபை விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு கூடிய விரைவில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை பா.ஜனதா கட்சியில் சேர்ந்திருப்பது பற்றி எனக்கு தகவல் வரவில்லை. அவர் பா.ஜனதாவில் சேர்ந்திருப்பதை வரவேற்கிறேன். மராட்டிய மாநிலத்தில் எதிர்பார்த்ததை விட குறைவான அளவே மழை பெய்துள்ளது.

    அந்த மாநிலத்தில் மழை குறைந்திருப்பதாலும், கர்நாடகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்திருப்பதாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. கடவுள் அருளால் அங்கு மழை குறைந்திருப்பதால் வடகர்நாடக மாவட்டங்களில் ஏற்படும் பாதிப்புகள் தப்பி இருக்கிறது. மழை பாதித்த மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்த பின்பு, பாதிப்புகள் குறித்த விவரங்களை அறிந்து, நிவாரண நிதி ஒதுக்கப்படும். மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×