search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை
    X
    முல்லைப்பெரியாறு அணை

    முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து என்பதற்கு ஆதாரம் இல்லை- சுப்ரீம் கோர்ட்டில் வாதம்

    முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து என்பதற்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்று மத்திய நீர்வள ஆணையம் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வாதிட்டார்.
    புதுடெல்லி:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 130 அடிக்கு குறைக்க வேண்டும் என்று கோரி இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஜாய் ரஸ்ஸல் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான காணொலி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய நீர்வள ஆணையம் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து என்பதற்கு அடிப்படை ஆதாரம் இல்லை. எனவே, நீர்மட்டத்தை குறைக்க தேவை இல்லை. அணையின் நீர் மட்டம் தற்போது 130 அடியாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அதன் சராசரி நீர் மட்டம் 123.21 அடியாகவே இருந்துள்ளது. எனவே மனுதாரரின் அச்சம் தேவையற்றது’ என்று வாதிட்டார்.

    மனுதாரர் தரப்பில், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களில் சில தொலைந்து விட்டன. அது தொடர்பான நகலை கோரி உள்ளோம். கிடைக்கும் வரை வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
    Next Story
    ×