search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து நடந்த பகுதி
    X
    விபத்து நடந்த பகுதி

    மகாராஷ்டிரா கட்டிட விபத்து - பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

    மகாராஷ்டிராவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிர தலைநகர் மும்பை அருகே உள்ள ராய்காட் மாவட்டம் மகாட், காஜல்புரா பகுதியில் தாரிக் கார்டன் என்ற 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இருந்தது.

    இந்த கட்டிடத்தின் மேல் தளமான 3 மாடிகள் நேற்றுமுன் தினம் மாலை 6.50 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த கட்டிட விபத்தில் பலர் சிக்கிக்கொண்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினரும் அப்பகுதி மக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
    மும்பையில் இருந்து விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர், நவீன எந்திரங்களுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    60-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், நேற்று காலை வரை 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்தன. 

    இந்நிலையில், தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணியில் மேலும் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 6 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் ஆகும். 

    கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என்பதால் அவர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில், அடுக்குமாடி கட்டிட விபத்தில் சிக்கி பலியானோரின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில மந்திரி விஜய் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×