search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இந்தியா இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் - மத்திய சுகாதாரத்துறை மந்திரி நம்பிக்கை

    இந்தியா கொரோனா தடுப்பூசியை இந்த ஆண்டு இறுதிக்குள் உருவாக்கும் என நம்பிக்கை உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ரஷியா தாங்கள் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்து பதிவு செய்து விட்டோம் என தெரிவித்துள்ளது. ஆனால், அந்த தடுப்பூசி இறுதி கட்ட பரிசோதனையில் உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. 

    இதனால் தடுப்பூசி கண்டுபிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, சீனா என பல்வேறு நாடுகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

    இதற்கிடையில், இந்தியாவும் கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்றும் தற்போது இறுதிகட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. 3-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனையில் களமிறங்கியுள்ளன.

    இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை இந்தியா இந்த ஆண்டு இறுதிக்குள் உருவாக்கும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். 

    இது குறித்து செய்தியாளரிடம் அவர் கூறுகையில், ’இந்தியாவில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் 1.87 என்ற சதவிகிதத்தில் உள்ளது. இது மிகவும் குறைவான இறப்பு விகிதமாகும். கொரோனாவில் இருந்து குணமடைவோர்
    விகிதம் 75 சதவிகம் என்ற அளவில் உள்ளது. இது உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறப்பான ஒன்றாகும். 

    நாடு முழுவதும் 1,500 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவே மிகப்பெரிய சாதனைதான்.

    கொரோனா வைரஸ் தடுப்பூசியை பொறுத்தவரை நம்மிடம் உள்ள தடுப்பூசிகளில் ஒன்று மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனையில் மூன்றாம் கட்டத்தில் உள்ளது. அந்த தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் உருவாக்கப்படும் என நாங்கள் நம்புகிறோம்’ என்றார்.

    Next Story
    ×