search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரசாந்த் பூஷண்
    X
    பிரசாந்த் பூஷண்

    மன்னிப்பு கேட்க மாட்டேன், தண்டனையை ஏற்க தயார்- பிரசாந்த் பூஷண்

    ஜனநாயகம் மற்றும் அதன் மதிப்புகளைப் பாதுகாக்க ஒரு வெளிப்படையான விமர்சனம் அவசியம் என உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, இருசக்கர சொகுசு வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருந்த படம் ஒன்று வெளியானது. இதனை தனது சமூக வலைதளப் பக்கங்களில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடுமையாக விமர்சித்திருந்தார். இதேபோல் நீதித்துறை, முன்னாள் நீதிபதிகளை பிரசாந்த் பூஷன் தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்து விசாரணை நடத்தியது.

    இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அவருக்கான தண்டனை தொடர்பான வாதம் இன்று நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் கூறியதாவது:-

    ‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான் குற்றவாளி எனக் கேட்டு வேதனையடைகிறேன். ஏனெனில் தண்டனை வழங்கப்படுவதால் அல்ல, நான் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்படுவதால். ஜனநாயகம் மற்றும் அதன் மதிப்புகளைப் பாதுகாக்க ஒரு வெளிப்படையான விமர்சனம் அவசியம்.

    எனது ட்வீட்டுகள் மூலம் எனது மிக உயர்ந்த கடமையை நிறைவேற்றுவதாகவே நான் கருதுகிறேன். மன்னிப்பு கேட்பது எனது கடமையில் இருந்து விலகுவதாக இருக்கும். நான் கருணை கேட்கவில்லை. நீதிமன்றம் விதிக்கும் எந்தவொரு தண்டனையையும் நான் மகிழ்ச்சியுடன் ஏற்க தயாராக இருக்கிறேன். எனது கருத்திற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். நீதிபதி குறித்த கருத்தில் தற்போதும் உறுதியாக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் தனது சீராய்வு மனு மீதான விசாரணை முடிவடையும்வரை தண்டனை தொடர்பான வாதத்தை தள்ளி வைக்கும்படி பிரசாந்த் பூஷண் கேட்டுக்கொண்டார். இதனை நீதிபதிகள் நிராகரித்தனர். உங்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டாலும், சீராய்வு மனு மீதான விசாரணைக்கு பிறகே நிறைவேற்றப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×