search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகத்தில் கனமழை
    X
    கர்நாடகத்தில் கனமழை

    கர்நாடகத்தில் கனமழைக்கு 19 பேர் பலி: 60 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம்

    கர்நாடகத்தில் கடந்த 2 வாரங்களில் கனமழைக்கு 19 பேர் உயிரிழந்து உள்ளனர். 5,500 வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாகவும், 60 ஆயிரம் ஏக்கர் விவசாய பயிர்கள் நாசமடைந்து இருப்பதாகவும் மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தொவித்து உள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.

    பெங்களூரு, மைசூரு, குடகு, சிவமொக்கா உள்ளிட்ட தென்கர்நாடக பகுதிகளிலும், தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய கடலோர மாவட்டங்களிலும், பெலகாவி, ராய்ச்சூர், பாகல்கோட்டை, யாதகிரி, விஜயாப்புரா, தார்வார் உள்ளிட்ட வடகர்நாடக பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மேலும் தொடர் கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன்காரணமாக அணைகளில் இருந்து ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் நேற்று வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா மலகானஹள்ளி பகுதியில் ஓடும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அந்த ஆற்றில் துணி துவைக்க சென்ற 16 வயது சிறுமி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அந்த சிறுமியின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவரை தீயணைப்பு படையினரும், போலீசாரும் தேடிவருகின்றனர். இதுபோல ராய்ச்சூர் அருகே ஆடு மேய்க்க சென்ற ஒருவரும் கிருஷ்ணா ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை. பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா சடலகா பகுதியில் பெய்த கனமழைக்கு வீடு இடிந்து ஒருவர் இறந்து உள்ளார்.

    கர்நாடக-தெலுங்கானா மாநில எல்லையில் அமைந்து உள்ள ராய்ச்சூர் மாவட்டம் குர்வகாலா கிராமத்தை சேர்ந்த 4 பெண்கள் தெலுங்கானாவுக்கு சென்று பொருட்கள் வாங்கி கொண்டு பரிசலில் குர்வகாலா வந்தனர். அப்போது கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பரிசல் கவிழ்ந்தது. இதில் 4 பெண்கள் கிருஷ்ணா ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

    கர்நாடகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் இதுவரை மழை, வெள்ளத்திற்கு 19 பேர் இறந்து உள்ளனர். 63 கால்நடைகள் செத்து உள்ளன. மழை, வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்காக மாநில அரசு 104 நிவாரண முகாம்களை தொடங்கி உள்ளது. இந்த முகாம்களில் 3,810 பேர் தங்கி உள்ளனர். வடகர்நாடகத்தில் உள்ள முக்கிய 2 அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பெலகாவி, பாகல்கோட்டை, கதக், கொப்பல், தாவணகெரே, ராய்ச்சூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

    கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா ஆனேகுந்தியில் உள்ள கிருஷ்ணதேவராய கோவில் மூழ்கி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கர்நாடகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது. கடந்த 1-ந் தேதி முதல் இதுவரை மழை, வெள்ளத்திற்கு 5,500 வீடுகள் சேதம் அடைந்தன. இதில் 216 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்து உள்ளன. 60 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. 50 ஆயிரம் ஹெக்டர் தோட்டக்கலை பயிர்களும் சேதம் அடைந்து உள்ளன.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×