search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை வெள்ள சேதங்களை துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    X
    மழை வெள்ள சேதங்களை துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வெள்ளத்தில் மிதக்கும் வடகர்நாடகம்: கிருஷ்ணா ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேரின் கதி என்ன?

    தொடர் கனமழையால் வடகர்நாடகம் வெள்ளத்தில் மிதக்கிறது. கிருஷ்ணா ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள், வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக வடகர்நாடக மாவட்டங்களான பெலகாவி, பாகல்கோட்டை, கதக், தார்வார், கலபுரகி, ராய்ச்சூர், கொப்பல், விஜயாப்புரா ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், வருகிற 21-ந்தேதி வரை மலைநாடு மாவட்டங்கள், வடகர்நாடக மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் எனவும், அங்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மராட்டியத்திலும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் சத்தாரா மாவட்டத்தில் உள்ள கொய்னா அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அந்த அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன்காரணமாக யாதகிரியில் உள்ள பசவசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 44 ஆயிரத்து 408 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 72 ஆயிரத்து 217 கனஅடி தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதுபோல விஜயாப்புரா மாவட்டம் நிடகுந்தியில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள அலமட்டி அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 66 ஆயிரத்து 935 கனஅடி தண்ணீர் வந்தது. அதே நேரத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 51 ஆயிரத்து 922 கனஅடி தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5 லட்சத்து 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகாவில் கிருஷ்ணா ஆற்றங்கரையையொட்டி அமைந்து உள்ள கோவனகொப்பா கிராமத்தை வெள்ளநீர் சூழ்ந்து கொண்டது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தன. மேலும் அந்த கிராமத்தில் 113 வீடுகள் மழைக்கு சேதம் அடைந்தன. மேலும் வீடுகளில் இருந்த பொருட்களையும் தண்ணீர் அடித்து சென்றது. இதுபோல ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகாவில் உள்ள ஏராளமான கிராமங்களில் ஆற்று வெள்ளம் புகுந்ததுடன், வீடுகளையும் சூழ்ந்து கொண்டது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.

    இந்த நிலையில் கர்நாடக-தெலுங்கானா எல்லையில் அமைந்து உள்ள ராய்ச்சூர் மாவட்டம் குர்வகாலா கிராமத்தை சேர்ந்த 13 பேர் 2 பரிசல்களில் நேற்று முன்தினம் கிருஷ்ணா ஆற்றை கடந்து தெலுங்கானாவில் உள்ள பஞ்சமபாத் பகுதிக்கு சென்றனர். அங்கு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு திரும்பி பரிசலில் வந்து கொண்டு இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் அதிகமானதால் ஒரு பரிசல் ஆற்றில் கவிழ்ந்தது.

    இதில் அந்த பரிசலில் சென்ற குர்வகாலா கிராமத்தை சேர்ந்த பார்வதி(வயது 55), நரசம்மா(36), சுமலதா(32), ரோஜா(10) ஆகிய 4 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். மீதம் உள்ள 9 பேரும் பத்திரமாக கரைக்கு வந்து சேர்த்தனர். அவர்கள் 4 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் அவர்களை தேடும் பணி நடந்தது. ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று தெலுங்கானா, கர்நாடக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இதனால் அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

    இந்த நிலையில் பெலகாவி மாவட்டத்தில் நேற்று தொடர்ந்து 7-வது நாளாக கனமழை கொட்டி தீர்த்தது. பெலகாவி, கானாப்புரா, அதானி, சவதத்தி, கோகாக், ராமதுர்கா ஆகிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்து கொண்டது. மேலும் விளைநிலங்களுக்கும் தண்ணீர் புகுந்தது. ராமதுர்கா பகுதியில் உள்ள அரசு பள்ளியை தண்ணீர் சூழ்ந்து கொண்டது. மேலும் அந்த கிராமத்தில் பயிரிடப்பட்டு இருந்த ராகி, சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

    மேலும் தொடர் கனமழை காரணமாக பெலகாவியில் அமைந்து உள்ள மல்லபிரபா அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அந்த அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி தண்ணீர் மல்லபிரபா ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதுபோல கோகாக்கில் உள்ள கோகாக் நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கட்டபிரபா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோகாக் அருகே மகாலிங்கேஷ்வர் நகரில் உள்ள வீடுகளையும், கடைகளையும் மழைநீர் சூழ்ந்து கொண்டது. இதனால் அங்கு வசித்து வருபவர்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பெலகாவி டவுனில் நேற்று கனமழைக்கு ஒரு வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவமாக அந்த வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    இதுபோல பாகல்கோட்டை மாவட்டத்தில் பாதாமி, முதோல் ஆகிய தாலுகாக்களில் உள்ள ஏராளமான கிராமங்கள் கிருஷ்ணா ஆற்றின் கரையையொட்டி அமைந்து உள்ளன. கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக முதோல்-யாதவாடா சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த ராகி, சோளம் பயிர்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஒட்டுமொத்தமாக வடகர்நாடகத்தை புரட்டி போட்டு உள்ள தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×