search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சொத்துக்காக ஐஸ்கிரீமில் விஷம் கலந்து தங்கை கொலை- வாலிபர் கைது

    சொத்துக்காக ஐஸ்கிரீமில் விஷத்தை கலந்து தங்கையை கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும், பெற்றோரையும் கொல்ல முயன்ற திடுக்கிடும் தகவலும் வெளியானது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் பென்னி (வயது 48). இவருடைய மனைவி பெஸ்ஸி. இவர்களுக்கு ஆல்பின் (22), ஆன்மேரி (16) என்ற 2 பிள்ளைகள். ஆல்பின் தமிழ்நாட்டில் உள்ள கம்பம் பகுதியில் ஐ.டி.ஐ. படித்து வருகிறார். கொரோனா காரணமாக தற்போது காசர்கோட்டில் உள்ள குடும்பத்தினருடன் வீட்டில் தங்கி வந்துள்ளார். அப்போது, குடும்ப சொத்து முழுவதையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை ஆல்பினுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆசை, குடும்பத்தையே தீர்த்துக் கட்ட வேண்டும் என்ற கொடூர மனநிலையை அவருக்கு ஏற்படுத்தியது. ஆனால், போலீசாரிடம் மாட்டிக் கொள்ளக்கூடாது என முடிவெடுத்தார்.

    அதன்படி அவர் சதித்திட்டம் தீட்டினார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஐஸ்கிரீமில் விஷம் கலந்து தனது சகோதரி ஆன்மேரி மற்றும் பெற்றோருக்கு கொடுத்தார். சகோதரி அதிகம் சாப்பிட்டதாகவும், பெற்றோர் குறைவாக சாப்பிட்டதாகவும் தெரிகிறது. மறுநாள் ஆன்மேரி வயிற்றுவலியால் அலறினார். உடனே அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதற்கிடையே ஆல்பின் பெற்றோருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அடுத்தடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஆன்மேரி பரிதாபமாக இறந்தார்.

    இதற்கிடையே, விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் தான் ஆன்மேரி இறந்ததாகவும், அவருடைய பெற்றோரும் பாதிக்கப்பட்டதாகவும் போலீசாருக்கு தெரியவந்தது. உடனே, ஆல்பினை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், சொத்துக்காக ஐஸ்கிரீமில் விஷம் கலந்து தங்கையை கொன்றதை ஒப்புக் கொண்டார். பெற்றோரை கொல்லும் திட்டம் தோல்வியில் முடிவடைந்ததையும் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆல்பினை கைது செய்தனர். இந்த கொடூர சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×