search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்
    X
    ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்

    பா.ஜ.க.வின் சதி திட்டம் தோல்வி அடைந்து விட்டது- ராஜஸ்தான் முதல் மந்திரி பேட்டி

    பா.ஜ.க.வின் சதி திட்டம் தோல்வியடைந்து விட்டது என ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. சச்சின் பைலட்டுக்கும், கெலாட்டுக்கும் ஏற்பட்ட அதிகார மோதல் விளைவாக பைலட்டின் துணை முதல் மந்திரி பதவி கடந்த ஜூலை மாதம் 14ந்தேதி பறிக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் 2 பேரின் மந்திரி பதவியும் பறிக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.

    ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் பைலட் செயல்படுகிறார் என்றும், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க போகிறார் என்றும் யூகங்கள் கிளம்பின.  ஆனால் இதற்கு பைலட் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த சர்ச்சையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

    சச்சின் பைலட், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசிய பின் சமரசம் ஏற்பட்டது. இந்நிலையில், முதல் மந்திரி அசோக் கெலாட்டின் இல்லத்தில் அவரது தலைமையில் நேற்று மாலை நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடப்பட்டது.

    இதனையேற்று சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கெலாட்டின் வீட்டிற்கு சென்றனர். பைலட்டை அசோக் கெலாட் வரவேற்றார். பின்னர் இருவரும் கைகுலுக்கி கொண்டனர். இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு முடிவுக்கு வந்தது.

    இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், சட்டசபையில் நாளை (வெள்ளி கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என கூறினார். இதன்படி, ராஜஸ்தான் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான முன்மொழிவை சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகார மந்திரி சாந்தி குமார் தாரிவால் இன்று மதியம் தாக்கல் செய்துள்ளார்.

    இதன்பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது. இதனால் ராஜஸ்தானில் ஆட்சி கவிழ்வதில் இருந்து காங்கிரஸ் அரசு தப்பியது.

    சட்டசபையில் இருந்து வெளியே வந்த முதல் மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் சந்தோச அலை பரவியுள்ளது. பா.ஜ.க.வின் சதி திட்டம் தோல்வியடைந்து உள்ளது. இந்த வெற்றி ராஜஸ்தான் மக்களின் வெற்றியெனவே நான் நினைக்கிறேன்.

    நாங்கள் இனி கொரோனாவுக்கு எதிரான போரில் இணைந்து பணியாற்றவுள்ளோம் என கூறினார். மத்திய பிரதேசம், கர்நாடகா, மராட்டியம், கோவா, மணிப்பூர் மற்றும் அருணாசல பிரதேசத்தில் பின்பற்றிய அதே சதி திட்டத்தினை ராஜஸ்தானிலும் செயல்படுத்த பா.ஜ.க.வினர் முயன்றனர்.  ஆனால் அவர்களது திட்டம் வெளிப்பட்டு விட்டது என கூறியுள்ளார்.
    Next Story
    ×