search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    உரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள்: பிரதமர் மோடி

    நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கடந்த பிப்ரவரி 1-ந்தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ‘வரி செலுத்துவோர் சாசனம்’தொடங்கப்படும் என்று அறிவித்தார். இந்த சாசனம், வரி செலுத்துவோருக்கும், வருமான வரித்துறைக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கும் என்றும், வரி செலுத்துவோருக்கு தொந்தரவுகளை குறைக்கும் என்றும் அவர் கூறினார். வரி செலுத்துவோர் மதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில், நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க ‘ஒளிவுமறைவற்ற வரிவிதிப்பு -  நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசுகையில் ‘‘உரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள். இத்திட்டம் செப்டம்பர் முதல் அமலுக்கு வரும். மத்திய அரசின் திட்டங்கள் மக்களை எளிதில் சென்று சேருகின்றன. வரி விதிப்பில் செய்யப்பட்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வரி செலுத்துவோர் அனைத்து துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்’’ என்றார்.

    இத்திட்டம் குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்த திட்டம், நேரடி வரிகள் சீர்திருத்த பயணத்தை மேலும் முன்னெடுத்து செல்லும். சமீபகாலமாக நேரடி வரிகள் பிரிவில் ஏராளமான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கம்பெனி வரி, 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டது. புதிய உற்பத்தி கூடங்களுக்கு 15 சதவீதமாக குறைக்கப்பட்டது. லாப ஈவு பகிர்வு வட்டி ரத்து செய்யப்பட்டது.

    இந்த வரி சீர்திருத்தங்களின் நோக்கம், வரி குறைப்பு மற்றும் நேரடி வரி சட்டங்களை எளிமைப்படுத்துவது ஆகும். வருமான வரித்துறை செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையையும், செயல்திறனையும் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    நிலுவையில் உள்ள வரி தாவாக்களுக்கு தீர்வு காண ‘விவாத் சே விஸ்வாஸ்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வருமானவரி கணக்கு தாக்கலுக்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ‘ரீபண்ட்’ தொகை விரைவாக திருப்பி அளிக்கப்படுகிறது. மின்னணு பண பரிமாற்ற முறைகளை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது.
    Next Story
    ×