search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ வைத்து எரிக்கப்பட்ட வாகனம்
    X
    தீ வைத்து எரிக்கப்பட்ட வாகனம்

    பெங்களூரு வன்முறை: சேதமடைந்த பொதுச்சொத்துக்கான தொகை வன்முறையாளர்களிடம் இருந்து வசூல்- கர்நாடக அரசு

    பெங்களூரு வன்முறை குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், சேதமடைந்த பொதுச்சொத்துக்கான தொகை வன்முறையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகாவில் உள்ள புலிகேசி நகர் தொகுதி எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் எம்.எல்.ஏ. அகண்ட மூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. எம்.எல்.ஏ.வின் உறவினரான நவீனை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எம்.எல்.ஏ.வின் வீடு மீது கற்களை வீசினர். தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் தீ வைக்கப்பட்டன.

    தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் வன்முறையைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தடியடியும் நடத்தி கூட்டத்தை கலைத்தனர். எனினும், வன்முறை கட்டுக்குள் வராததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 50 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

    இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வன்முறை குறித்து நீதித்துறை விசாரணை நடத்தப்படும். சேதமடைந்த பொதுச்சொத்துகளுக்கான தொகை வன்முறையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து கர்நாடக மந்திரி பொம்பை கூறுகையில் ‘‘இதுபோன்ற வன்முறையின்போது பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தால் அதை சேதமாக்கியவர்களிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
    Next Story
    ×