search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    எந்த முக கவசம் நல்லது?

    எந்த முக கவசம் நல்லது என்பது குறித்து அமெரிக்காவில் டர்ஹாம் நகரில் அமைந்துள்ள டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து இருக்கிறார்கள்
    இந்தியாவில் ஆரம்பத்தில் முக கவசம் பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டை பெறாதபோதும், இப்போது பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வு பெற்று அணியத்தொடங்கி இருக்கிறார்கள்.

    கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வருகிற வரையில், தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முக கவசம், தனிமனித இடைவெளி, கைச்சுத்தம் ஆகிய மூன்றும்தான் பாதுகாப்பு கவசங்களாக பயன்படும் என உலக சுகாதார நிறுவனம் தொடங்கி அனைத்து தரப்பினராலும் வலியுறுத்தப்படுகிறது.

    இந்தியாவில் ஆரம்பத்தில் முக கவசம் பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டை பெறாதபோதும், இப்போது பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வு பெற்று அணியத்தொடங்கி இருக்கிறார்கள்.

    விதவிதமான முக கவசங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

    இந்த நிலையில் 14 விதமான முக கவசங்களை அமெரிக்காவில் டர்ஹாம் நகரில் அமைந்துள்ள டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து இருக்கிறார்கள்.

    இந்த ஆய்வில் பங்கேற்பாளர் ஒருவருடைய மூச்சில் இருந்து நீர்த்துளிகள் சிதறடிக்கப்படுவதை ஒப்பிட்டு பார்த்தார்கள்.

    இதில் சாதாரணமாக சுகாதார ஊழியர்கள் அணிகிற வால்வுகள் இல்லாத என்-95 முக கவசங்கள்தான் மிகவும் பயனுள்ள முக கவசம் என்று அவர்கள் கண்டறிந்தனர். நெக் பிளஸ் வகை முக கவசம்தான் மிக குறைவான பயன் அளிக்கத்தக்கது. உண்மையில் இந்த வகை முக கவசம்தான் தொற்று அபாயத்தை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வினை நடத்திய ஆராய்ச்சியாளர் மார்டிட்டின் பிஷ்ஷர் கூறுகையில், “எந்த முக கவசமும் அணியாமல் அளவிடப்பட்ட துகள்களின்அளவை விட நெக் பிளஸ் வகை முக கவசம் அணிகிறபோது அதில் உள்ள துகள்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தோம். நாங்கள் மக்கள் முக கவசங்கள் அணிவதை ஊக்குவிக்கிறோம். ஆனால் அவர்கள் வேலை செய்கிற முக கவசங்களை அணிய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்கிறார்.

    பண்டனாஸ் வகை முக கவசம் மோசமான முக கவசத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பின்னலாடை முக கவசம் மூன்றாவது மோசமான முக கவசம் என கண்டறிந்துள்ளனர்.

    அறுவை சிகிச்சையின்போது டாக்டர்கள் அணிகிற சர்ஜிக்கல் முக கவசம், ஆய்வில் நன்றாக வேலை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது நல்ல முக கவசங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    பாலிபுரொபைலின் முக கவசம் மூன்றாவது சிறந்த முக கவசம்.

    கையால் செய்யப்பட்ட பருத்தி முக கவசமும் நன்றாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சாதாரண உரையாடல்களில் கணிசமான எண்ணிக்கையிலான நீர்த்துளிகளை அகற்றுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிற முக்கிய தகவல்கள்:-

    * மக்கள் பேசுகிறபோது சிறிய அளவில் நீர்த்துளிகள் வெளியேறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இருமல், தும்மல் இன்றி பேசுவதின் மூலமும் தொற்று பரவலாம்.

    * கொரோனா தொற்றை விரட்டியடிக்க முக கவசம் அணிவது எளிய வழி.

    * பாதி நோய் தொற்று அறிகுறிகளை காட்டாத நபர்களிடம் இருந்து வந்தவை. ஆனால் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியாது. அவர்கள் இருமும்போது, தும்மும்போது, ஏன் பேசும்போது கூட தொற்று பரவுகிறது.

    * எல்லோரும் முக கவசம் அணிந்தால், நீர்த்துளிகள் 99 சதவீதம் வரை வேறொருவரை அடைவதற்கு முன் தடுத்து நிறுத்த முடியும்.
    Next Story
    ×