search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    கொரோனா தடுப்பு பணி: மோடி அரசின் நடவடிக்கைக்கு 74 சதவீதம் பேர் ஆதரவு

    நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக 74 சதவீதம் பேர் தெரிவித்து இருப்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது.
    புதுடெல்லி :

    உயிர்க்கொல்லி நோயானா கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் எப்படி உள்ளன? என்பது பற்றி நாடு முழுவதும் ‘கோவன் கனெக்‌ஷன் இன்சைட்ஸ்’ என்ற அமைப்பின் சார்பில் ஆய்வு நடத்தி மக்களிடம் கருத்து கேட்டு அறியப்பட்டது.

    ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், மராட்டியம், குஜராத், மத்தியபிரதேசம், கேரளா உள்ளிட்ட 23 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர், லடாக், அந்தமான் ஆகிய யூனியன் பிரதேசங்களில் உள்ள 179 மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் கடந்த மே மாதம் 30-ந் தேதி முதல் ஜூலை 16-ந் தேதி வரை 25 ஆயிரத்து 371 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதுபற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன.

    ஆய்வில் வெளியான தகவல்கள் வருமாறு:-

    * கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மிகவும் திருப்தி அளிப்பதாக 37 சதவீதம் பேரும், ஓரளவு திருப்தி அளிப்பதாக, அதாவது பரவாயில்லை 37 சதவீதம் பேரும் கூறி உள்ளனர். அந்த வகையில் 74 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.

    * திருப்தி அளிக்கவில்லை என்று 14 சதவீதத்துக்கும் அதிகமான பேரும், மிகவும் மோசம் என்று 7 சதவீதம் பேரும் தெரிவித்து உள்ளனர்.

    * கொரோனாவை கட்டுப்படுத்த தங்கள் மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் திருப்பி அளிப்பதாக 78 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.

    * வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்சினையில் மத்திய அரசின் அணுகுமுறை மிகச் சிறப்பாக இருந்ததாக 29 சதவீதம் பேரும், சிறப்பாக இருந்ததாக 44 சதவீதம் பேரும் தெரிவித்தனர். 14 சதவீதம் பேர் மோசம் என்றும், 9 சதவீதம் பேர் மிகவும் மோசம் என்றும் கூறினார்கள்.

    * வெளிமாநில தொழிலாளர்களை மாநில அரசுகள் நடத்திய விதம் நன்றாக இருந்ததாக 76 சதவீதம் பேரும், மோசமாக இருந்ததாக 20 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    * ஊரடங்கினால் 23 சதவீத வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்று உள்ளனர்.

    * 33 சதவீதத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் மீண்டும் நகரங்களுக்கு சென்று வேலை செய்ய விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.

    * மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை கிடைத்ததாக 20 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.

    * ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகவும் கடுமை என்று 40 சதவீதம் பேரும், கடுமை என்று 38 சதவீதம் பேரும், 11 சதவீதம் பேர் இன்னும் கடுமையாக இருந்திருக்க வேண்டும் என்றும், 4 சதவீதம் பேர் ஊரடங்கை அமல்படுத்தி இருக்கக்கூடாது என்றும் கூறி உள்ளனர்.

    * ஊரடங்கால் ஏற்பட்ட பண நெருக்கடியை சமாளிக்க கடன் வாங்கியதாக 23 சதவீதம் பேரும், செல்போன், கைக்கெடிகாரம் போன்றவற்றை விற்றதாக 8 சதவீதம் பேரும், நகைகளை அடகு வைத்ததாக 7 சதவீதம் பேரும், நிலத்தை விற்றதாக அல்லது ஒத்திவைத்ததாக 5 சதவீதம் பேரும் கூறி இருக்கிறார்கள்.

    * ரேஷன் கார்டு மூலம் இலவச அரிசி அல்லது கோதுமை பெற்றதாக 71 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.

    * ஊரடங்கால் தங்கள் மாத வருமானம் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக 71 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.

    * 75 சதவீத ஏழை குடும்பங்கள், 74 சதவீத கீழ்நிலையில் உள்ள குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன.

    * இனி வரும் மாதங்களில் கார் வாங்குவது பற்றி சிந்திப்பதாக 9 சதவீதம் பேரும், மோட்டார் சைக்கிள் வாங்குவது பற்றி யோசிப்பதாக 14 சதவீதம் பேரும் கூறி உள்ளனர்.

    * ஊரடங்கு அமலில் இருந்தாலும் உரிய நேரத்தில் அறுவடையை முடித்துவிட்டதாக 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூறி உள்ளனர். ஆனால் அவர்களில் நான்கில் ஒருவர்தான் உரிய நேரத்தில் விளைபொருட்களை விற்க முடிந்ததாக தெரிவித்து இருக்கிறார்கள்.

    மேற்கண்ட விவரங்கள் ஆய்வில் தெரியவந்து உள்ளன.

    Next Story
    ×