search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி - சச்சின் பைலட்
    X
    ராகுல் காந்தி - சச்சின் பைலட்

    ராகுல் காந்தியை சந்தித்த சச்சின் பைலட் - முடிவுக்கு வருகிறதா ராஜஸ்தான் அரசியல் குழப்பம்?

    ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக சர்ச்சை எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை முதல்மந்திரியுமான சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தியை இன்று சந்தித்தார்.
    புதுடெல்லி:

    ராஜஸ்தானில் முதல்மந்திரி அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் உருவானது. இதையடுத்து தனது ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 19 பேரை சச்சின் பைலட் தனியார் சொகுசு விடுதியில் தங்கவைத்தார். மேலும், அசோக் கெலாட்டிற்கு பெரும்பான்மை இல்லை எனவும் தெரிவித்து வந்தார்.

    தன்னை முதல்மந்திரியாக அறிவிக்கவேண்டும் என்பதற்காகவே சச்சின் பைலட் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ப்ட பலரும் பைலட்டிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் சமரசத்தில் ஈடுபடாமலேயே இருந்தார். 
      
    இதனால் ராஜஸ்தான் துணை முதல்மந்திரி, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டதுடன், சபாநாயகர் பைலட் உள்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களுக்கு கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக நோட்டீஸ் அனுப்பினார்.

    சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடினார். 

    இந்த விவகாரத்தில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 19 எம்.எல்.ஏ.-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

    இதனிடையே தற்போது தன்னிடம் அதிக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதால் ராஜஸ்தான் மாநில சட்டசபையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற்சியில் கெலாட் இறங்கினார்.

    இதற்காக மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை பல முறை சந்தித்த கெலாட் சட்டசபையை உடனடியாக கூட்ட அனுமதிக்க வேண்டும் என வலியுறித்தினார். ஆனால், முதல்மந்திரியின் கோரிக்கையை பல முறை நிராகரித்த கவர்னர் கல்ராஜ் இறுதியாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி சட்டப்பேரவையை கூட்ட அனுமதியளித்துள்ளார்.

    இதனால், வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்மந்திரி அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக அதிருப்தி முன்னாள் முதல்மந்திரி சச்சின் பைலட் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை டெல்லியில் சந்தித்தார்.

    இந்த சந்திப்பின்போது, ராஜஸ்தான் அரசியல் நிலவரம் குறித்தும் கட்சியில் தான் சந்தித்துவரும் குறைகள் குறித்தும் ராகுல் காந்தியிடம் சச்சின்பைலட் எடுத்துரைத்தார். 

    இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ராகுல்காந்தி உறுதியளித்தார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சிக்கும், ராஜஸ்தான் அரசுக்கும் தான் உறுதுணையாக இருப்பதாக ராகுல்காந்தியிடம் சச்சின் பைலட் உறுதியளித்துள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சச்சின் பைலட் இன்று சந்திதார். இந்த சந்திப்பின்போது கட்சி தொடர்பான தனது குறைகளை ராகுல்காந்தியிடம் அவர் எடுத்துரைத்தார்.

    இருவரும் வெளிப்படையான ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் கட்சியின் நலனுக்காகவும், ராஜஸ்தான் காங்கிரஸ் அரசின் நலனுக்காகவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சச்சின் பைலட் உறுதிபூண்டுள்ளது.

    இரு தலைவர்களின் சந்திப்பை தொடர்ந்து சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய பிரச்சனைகளுக்கு தீர்வுகான காங்கிரஸ் கட்சி சார்பில் 3 பேர் கொண்ட குழு அமைக்க கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளார்.

    என அவர் தெரிவித்தார். 

    ராகுல்காந்தியை சந்தித்த சச்சின் பைலட் கட்சி நலனுக்காக தேவையான நடவடிக்கைகளை எடுக்க உறுதியளித்துள்ளதால் வரும் 14 ஆம் தேதி கூடவுள்ள ராஜஸ்தான் சட்டப்பேரவையில் முதல்மந்திரி அசோக் கெலாட்டுக்கு தனது ஆதரவை தெரிவிக்கலாம் என எதிர்பாக்கப்படுகிறது. 

    இந்த கூட்டத்தொடரின்போது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் பட்சத்தில் சச்சின் பைலட்டின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் கெலாட்டுக்கு ஆதரவாகவே வாக்களிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் மூலம் ராஜஸ்தான் அரசியலில் 1 மாதத்திற்கு மேலாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்து முதல்மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியே தொடர்ந்து நீடிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.    
    Next Story
    ×