search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா விமான விபத்து
    X
    கேரளா விமான விபத்து

    கேரள கரிப்பூர் விமான நிலையம் பாதுகாப்பற்றது- 9 வருடங்களுக்கு முன்பே விடப்பட்ட எச்சரிக்கை

    கேரள கரிப்பூர் விமான நிலையம் பாதுகாப்பற்றது என 9 வருடங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.
    திருவனந்தபுரம்:

    கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள், மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

    இதுபோன்று துபாயில் சிக்கி தவித்த 10 குழந்தைகள் உள்பட 185 இந்தியர்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் நேற்று கேரள மாநிலம் கோழிக்கோடு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 3 பேர் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். விமானத்தில் பயணிகள் தவிர 2 விமானிகள், 4 பணிப்பெண்கள் என மொத்தம் 191 பேர் இருந்தனர்.

    துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு வந்த அந்த விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியதும், விமானத்தை தரை இறக்குவதற்கான முயற்சியை விமானிகள் மேற்கொண்டனர். அப்போது பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது.

    விமானம் ஓடுபாதையில் தரை இறங்கியபோது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு வேகமாக ஓடிய விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை தாண்டி சென்று அருகில் உள்ள 35 அடி பள்ளத்தில் விழுந்தது. இதனால் அதில் இருந்த பயணிகள் அலறினார்கள்.

    பள்ளத்தில் விழுந்த விமானம் பயங்கர சத்தத்துடன் இரண்டாக உடைந்தது. விமானி அறையில் இருந்து முன்பக்க கதவு உள்ள பகுதி வரை உடைந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் விமானி உள்பட 19 பேர் பலி ஆனார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகிலுள்ள நகர மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

    இந்த விபத்து நேர்ந்தது பற்றி, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசக குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான கேப்டன் மோகன் ரங்கநாதன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மங்களூர் விமான விபத்து நடந்தபின்னர் நான் விடுத்த எச்சரிக்கை கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது.

    இந்த விமான நிலைய ஓடுதளம் சரிவு பகுதியை கொண்டுள்ளது. ஓடுதளத்தின் முடிவு பகுதியில் போதிய இடவசதி இல்லை. ஓடுதள முடிவில் 240 மீட்டர் அளவுக்கு காலியிடம் அமைந்திருக்க வேண்டும். ஆனால் 90 மீட்டர் அளவுக்கே இடம் உள்ளது (இதற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது).

    இதுதவிர, ஓடுதளத்தின் இரு பகுதிகளிலும் 75 மீட்டர் அளவுக்கே காலியிடம் விடப்பட்டு உள்ளது. ஆனால் 100 மீட்டர் அளவுக்கு கட்டாயம் காலியிட வசதி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார். மழைக்காலத்தில் இதுபோன்ற ஓடுதளங்களில் விமானங்களை இயக்குவதற்கான வழிமுறைகள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    அதனால், ஓடுதள முடிவில் பாதுகாப்பு பகுதிக்காக 240 மீட்டர் அளவுக்கு காலியாக விடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கூறினார். விமான இயக்கங்கள் பாதுகாப்புடன் இருப்பதற்கு ஓடுதள நீளம் ஆனது குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×