search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாய் மங்களூர் ஏர் இந்தியா விமான விபத்து
    X
    துபாய் மங்களூர் ஏர் இந்தியா விமான விபத்து

    துபாய்-மங்களூர் ஏர் இந்தியா விமான விபத்தை நினைவுப்படுத்திய கோழிக்கோடு விபத்து

    துபாய்-கோழிக்கோடு ஏர் இந்தியா விமான விபத்தில் 19 பேர் பலியாகி உள்ளனர். இந்த விமான விபத்து கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற துபாய்-மங்களூர் ஏர் இந்தியா விமான விபத்தை நினைவுப்படுத்தி உள்ளது.
    துபாய்- கோழிக்கோடு ஏர் இந்தியா விமான விபத்தில் 19 பேர் பலியாகி உள்ளனர்.  நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் இந்த விமான விபத்து கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற துபாய்-மங்களூர் ஏர் இந்தியா விமான விபத்தை நினைவுப்படுத்தி உள்ளது. துபாயில் இருந்து மங்களூர் விமான நிலையத்திற்கு வந்து தரையிறங்கும்போது ஏர் இந்தியா விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் 158 பேர் உயிரிழந்தனர். துபாய் - மங்களூர் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விரிவாக பார்க்கலாம்.

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 812 (போயிங் நிறுவனத்தின் 737-800) கடந்த 2010-ம் ஆண்டு மே 22-ந்தேதி துபாயில் இருந்து மங்களூர் புறப்பட்டது. காலை 6.30 மணியளவில் விமானம் மங்களூர் விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்கியது. விமானத்தில் 160 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 6 ஊழியர்கள் என 166 பேர் இருந்தனர். விமான நிலையம் மலைப்பகுதியில் அமைந்திருந்தது. அருகில் காடுகள் நிறைந்து இருந்தன.

    பயணிகளை வரவேற்க உறவினர்கள் காத்திருந்தனர். விமானம் ஓடுதளத்தை தொட்டதும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஓடுதளத்தை விட்டு இறங்கி காட்டிற்குள் புகுந்தது. அங்கிருந்த மரங்களை இறக்கைகள் இடித்துத் தள்ளின. அதன்பின் பாறையில் மோதி தீப்பிடித்து எரிந்தது.

    இந்த கோர விபத்தில் 158 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர். விமானியின் அஜாக்கிரதையின் காரணமாகத்தான் விமான விபத்து ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை இயக்கிய விமானி லேட்கோ குளூசிகா நல்ல தூக்கத்தில் இருந்ததன் காரணமாகவே ரன்வேயை தவற விட்டுவிட்டு, அவசர கோலத்தில் நிலைமையை சமாளிக்க முயன்று விபத்துக்குள்ளானதாக விசாரணை அறிக்கை கூறியது.

    10,000 மணி நேரத்திற்கும் மேல் பறந்த அனுபவம் கொண்ட குளூசிகா பல தவறுகளை செய்துள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விமானத்திற்கு, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து வந்த பல்வேறு எச்சரிக்கைகளை அவர் செவிமடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்தின்போது எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் சரிவர செய்யவில்லை, துணை விமானியின் அறிவுரைகளையும் அவர் கேட்கவில்லையாம். அனைத்தும் சேர்ந்து விமானத்தை விபத்துக்குள்ளாக்கி விட்டது.

    கருப்புப் பெட்டி எனப்படும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் கருவியில் பதிவாகியுள்ள தகவல்களைக் கொண்டு இந்த முடிவுக்கு வரப்பட்டுள்ளது.

    வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவான முக்கியத் தகவல்கள்...

    1. விமானம் துபாயிலிருந்து கிளம்பியதும் தூங்க ஆரம்பித்துள்ளார் குளூசிகா. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நாற்பது நிமிடங்களுக்கு அவர் தூங்கியுள்ளார். பலத்த குறட்டை சப்தமும், பலத்த மூச்சு விடும் சப்தமும் ரெக்கார்டரில் பதிவாகியுள்ளது. அவரிடமிருந்து எந்த சப்தமும் வரவில்லை. நீண்ட தூர பயணத்தின்போது விமானி தூங்குவதும், துணை விமானிகள் விமானத்தை செலுத்துவதும் வழக்கமானதுதான். ஆனால் குளூசிகா மிக நீண்ட நேரம் தூங்கியுள்ளார். தரையிறங்க சிறிது நேரம் இருக்கும்போதுதான் விழித்துள்ளார். இதனால் தூக்க கலக்கத்திலேயே விமானத்தை இயக்கியுள்ளார்.

    2. விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும்போதுதான் விழித்த குளூசிகா தொடர்ந்து அடுத்தடுத்து தவறுகளை செய்துள்ளார். ரன்வேயில் இறக்க வேண்டிய இடத்தை விட்டு அவர் தாண்டி வந்து விட்டார். இதுகுறித்து துணை விமானி அலுவாலியா, குளூசிகாவை எச்சரித்துள்ளார்.

    3. பாதி ரன்வேயில் விமானம் இறங்கியதை உணர்ந்த விமானி உடனடியாக அதை கிளப்ப முயன்றுள்ளார். மீண்டும் வானில் ஒரு சுற்று வந்துவிட்டு இறங்கலாம் என அவர் முடிவு செய்திருக்கலாம். ஆனால் அதற்குள் மேல் போக ரன்வே இல்லாததால் விமானம் லோக்கலைசரில் தட்டி மலைப்பகுதியி்ல் போய் விழுந்து நொறுங்கி விட்டது.

    4. விமானி அலுவாலியா ஆபத்தை உணர்ந்து, இனிமேலும் விமானத்தை டேக் ஆப் செய்ய நமக்கு போதிய ரன்வே இல்லை என்று கூறியதும் ரெக்கார்டரில் பதிவாகியுள்ளது.

    விமானம் தீ பிடித்ததால் பலரது உடல்கள் அடையாளம் காண இயலாத அளவில் கருகியது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தின் காசர்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் இறந்தவர்களில் பலர் மத்திய கிழக்கு நாடுகளில் கூலி தொழிலாளர்களாக வேலை செய்தவர்கள்.

    நேற்று துபாயில் இருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும் இதுபோன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

    விமானம் 2 ஆயிரம் மீட்டர் தொலையில் வரும்போது ஓடுதளத்தில் மழை நீர் தேங்கி நின்றதாக கூறப்படுகிறது. விமானி மிகவும் அனுபவம் பெற்றவர் எனக் கூறப்படுகிறது. விமானி ஓடுதளத்தை சரியாக கவனிக்கவில்லையா?  என்பது கருப்புப்பெட்டியை மீட்டு அதில் இருந்து விமானிகளின் உரையாடல்களை கேட்ட பிறகுதான் முழுமையாக தெரியவரும்.
    Next Story
    ×