search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    நீட், ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரி வழக்கு- சுப்ரீம் கோர்ட்டில் மனு

    கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பும் வரை நீட், ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என 11 மாநிலங்களை சேர்ந்த 11 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
    புதுடெல்லி:

    ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கான ஜே.இ.இ. பிரதான நுழைவுத்தேர்வுகள் மற்றும் மருத்துவ நுழைவுத்தேர்வு (நீட்) போன்றவை கொரோனா பரவல் காரணமாக அடுத்த மாதத்துக்கு (செப்டம்பர்) தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஜே.இ.இ. பிரதான தேர்வு செப்டம்பர் 1 முதல் 6-ந்தேதி வரையும், ‘நீட்’ தேர்வு 13-ந் தேதியும் நடத்தப்படும் என தேசிய திறனாய்வு ஏஜென்சி அறிவித்து இருந்தது.

    ஆனால் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றின் வேகம் இன்னும் குறையவில்லை. எனவே கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பும் வரை இந்த தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என 11 மாநிலங்களை சேர்ந்த 11 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

    அந்த மாணவர்கள் சார்பில் வக்கீல் அலோக் ஸ்ரீவஸ்தவா தாக்கல் செய்த மனுவில், ‘இந்தியா முழுவதும் இந்த ஆபத்தான சூழலில் மேற்கண்ட தேர்வுகளை நடத்துவது, லட்சக்கணக்கான மாணவர்களின் (மனுதாரர்கள் உள்பட) உயிரை நோய் மற்றும் மரண அபாயத்தில் வைப்பதை தவிர வேறு ஒன்றுமில்லை. மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் உயிரை காப்பாற்றுவதற்காக, இன்னும் சிறிது காலம் காத்திருப்பதே மிகச்சிறந்த வழியாகும். கொரோனா நெருக்கடி குறைந்து இயல்புநிலை திரும்பியபின் தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மேலும இந்த தேர்வுகளுக்காக கூடுதல் தேர்வு மையங்களை திறக்க உத்தரவிடக்கோரியும் மாணவர்கள் அந்த மனுவில் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    Next Story
    ×