search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-மந்திரி கெஜ்ரிவால்
    X
    முதல்-மந்திரி கெஜ்ரிவால்

    கற்பழிக்கப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு

    டெல்லியில் கற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்தார்.
    புதுடெல்லி:

    டெல்லி பாஸ்சிம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் கடந்த 4-ந்தேதி மர்ம நபர்களால் கற்பழிக்கப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டார். முகம், தலை என உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் பார்த்து போலீசில் தெரிவித்தனர்.

    பின்னர் அவர் மீட்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அன்று இரவிலேயே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    டெல்லியை உலுக்கிய நிர்பயா சம்பவத்தை போல இந்த கொடூர சம்பவமும் டெல்லியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளன. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து தண்டிக்க வேண்டும் என அனைத்துக்கட்சியினரும், அமைப்புகளும் அரசை வலியுறுத்தி வருகின்றன.

    இந்த சம்பவம் குறித்து அறிந்து பெரும் வேதனை வெளியிட்ட முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், சிறுமியை கற்பழித்த குற்றவாளிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என அறிவித்தார். அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் சிறுமியை பார்த்தார்.

    பின்னர் சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்ததுடன், இந்த வழக்கில் சிறுமிக்காக வாதாட மிகச்சிறந்த வக்கீல்களை அரசு நியமிக்கும் என அறிவித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாநில போலீஸ் கமி ஷனருடன் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குற்றவாளிகளை விரைவில் கைது செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

    இதற்கிடையே டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மலிவால் நேற்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று சிறுமியை பார்த்தார். பின்னர் அவர் கூறுகையில், சிறுமியின் உடல், தலை என அனைத்து இடங்களிலும் பலத்த காயம் இருப்பதாகவும், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    இந்த வழக்கில் இன்னும் யாரும் கைது செய்யப்படாததை கண்டித்த அவர், இது தொடர்பாக போலீசாருக்கு சம்மன் அனுப்பியிருப்பதாகவும் கூறினார்.

    டெல்லியை உலுக்கி உள்ள இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதற்கு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    Next Story
    ×