search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா, பெண் போலீஸ் அதிகாரி ரூபா
    X
    சசிகலா, பெண் போலீஸ் அதிகாரி ரூபா

    உள்துறை செயலாளராக பெண் அதிகாரி ரூபா நியமனம் - சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கலா?

    கர்நாடக மாநில உள்துறை செயலாளராக கண்டிப்பான பெண் அதிகாரி ரூபா நியமிக்கப்பட்டு இருப்பதால் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது.

    இதற்கிடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறைத்துறை டி.ஜ.ஜி.யாக நியமிக்கப்பட்ட பெண் அதிகாரி ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி, சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டிருந்ததாகவும், இதற்காக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்தவருக்கு ரூ.2 கோடி லஞ்சம் தரப்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டார். இது கர்நாடகம், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

    இதுகுறித்து அப்போது முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையில், சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது அம்பலமானது. அதோடு லஞ்ச புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று சமீபகாலமாக தகவல்கள் பரவி வருகின்றன. இதுபற்றி பா.ஜனதாவை சேர்ந்த நிர்வாகி ஒருவரே சமீபத்தில் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது, சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என்ற தகவலுக்கு மேலும் வலு சேர்ப்பதாக இருந்தது.

    இந்த சூழ்நிலையில் சசிகலா சட்டவிரோதமாக சிறையில் பெற்ற சலுகைகளை அம்பலப்படுத்திய கண்டிப்பான பெண் போலீஸ் அதிகாரி ரூபா, முக்கிய, அதிகாரமிக்க துறையாக கருதப்படும் கர்நாடக அரசின் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட வேண்டுமென்றால், உள்துறை செயலாளர் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். அதன்படி பார்த்தால், சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய ரூபா பரிந்துரை செய்வாரா என்பது கேள்விக்குறியே.

    இதனால், சசிகலா முன்கூட்டியே விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து மாநில அரசு எடுக்கும் முடிவே இறுதியானது என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×