search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாய் மனிதநேய நகரத்தில் இருந்து லெபனான் நாட்டிற்கு நிவாரண பொருட்கள் சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்ட காட்சி.
    X
    துபாய் மனிதநேய நகரத்தில் இருந்து லெபனான் நாட்டிற்கு நிவாரண பொருட்கள் சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்ட காட்சி.

    லெபனான் ரசாயன வெடிவிபத்து - துபாயில் இருந்து 43 டன் நிவாரணபொருட்கள் விமானம் மூலம் அனுப்பப்பட்டன

    லெபனான் ரசாயன வெடிவிபத்தில் 135 பேர் பலியானார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு துபாயில் இருந்து 43 டன் நிவாரணபொருட்கள் விமானம் மூலம் அனுப்பப்பட்டன.
    துபாய்:

    லெபனான் நாடு அண்மை காலமாக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. மேற்காசிய நாடான லெபனான் சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது. அதன் துறைமுக நகரும், தலைநகருமான பெய்ரூட்டில் நேற்று முன் தினம் மாலை சக்திவாய்ந்த ரசாயன வெடிவிபத்து ஏற்பட்டது. துறைமுகத்துக்கு அருகில் உள்ள சேமிப்பு குடோனில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பின் விளைவாக அந்த குடோன் அமைந்திருந்த கட்டிடம் மற்றும் அதன் அருகில் அமைந்திருந்த கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

    குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தூரம் வரை சேதம் அடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அருகிலிருந்த கட்டிடங்கள், அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள், சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் வெடித்து சிதறின. பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 135-க்கும் மேற்பட்ட பேர் உயிரிழந்ததாகவும், 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படு காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தீவிரவாத தாக்குதலாக இருக்குமோ என்று கூறப்பட்டுவந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்டு துறைமுக கிடங்கில் 6 ஆண்டுகளாக வைத்திருந்த 2 ஆயிரத்து 750 டன் அமோனியம் நைட்ரேட் என்ற வெடிமருந்து வெடித்ததே இந்த சம்பவத்திற்கான காரணமாக லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் கூறியுள்ளார்.

    உள் நாட்டு போர், கொரோனா பாதிப்பு ஆகியவற்றால் பெரும் இழப்புகளை சந்தித்து வரும் லெபனானில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் மேலும் ஒரு பேரிடியாக இறங்கியுள்ளது.

    இதைத்தொடர்ந்து அந்த நாட்டிற்கு உடனடியாக நிவாரண பொருட்களை அனுப்ப அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உத்தரவின்படி துபாய் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் உலக சுகாதார நிறுவனத்தின் ஒத்துழைப்பில் அமீரக செம்பிறை சங்கம், துபாய் மனிதநேய நகரம் ஆகியவை சார்பில் 20 லட்சம் திர்ஹாம் மதிப்புள்ள 43 டன் எடையுள்ள நிவாரண பொருட்கள் உடனடியாக அனுப்பப்பட்டுள்ளது.

    துபாயில் இருந்து சிறப்பு சரக்கு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று நிவாரண பொருட்கள் லெபனான் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் அந்த நாட்டில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் நிவாரண பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×