search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக தொற்றுபரவல் குறைவு - இறப்பு விகிதம் 2.10 சதவீதமாக சரிந்தது

    இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக தொற்றுபரவல் சற்று குறைந்துள்ளது. ஒரு நாளில் 52 ஆயிரத்து 50 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இறப்பு விகிதம் 2.10 சதவீதமாக சரிந்தது.
    புதுடெல்லி:

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்ந்து அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. நேற்று மதிய நிலவரப்படி, அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய தகவல்கள்படி 1 கோடியே 85 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உள்ளது. இந்த தொற்றுக்கு இரையானோர் எண்ணிக்கை 7 லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

    தொற்று பாதிப்பு அளவில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து இந்தியா, உலகின் 3-ம் இடத்தில் இருக்கிறது.

    இந்தியாவில் தொடர்ந்து 6-வது நாளாக நேற்றும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 50 ஆகும்.

    கடந்த 1-ந் தேதி தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 57 ஆயிரத்து 118 ஆக இருந்தது. 2-ந் தேதி இது, 54 ஆயிரத்து 735 ஆக குறைந்தது. 3-ந் தேதி இது மேலும் சரிந்து 52 ஆயிரத்து 972 ஆனது. இந்த எண்ணிக்கை நேற்று மேலும் சரிந்து, 52 ஆயிரத்து 50 பேருக்கு தொற்று பதிவாகி உள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 3-வது நாளாக நேற்று இந்தியாவில் தொற்று பரவல் சற்று குறைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.

    நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 803 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 938 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று பலியான 803 பேரில், 266 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள். அதற்கு அடுத்த நிலையில் தமிழகம் இருக்கிறது.

    இவ்விரு மாநிலங்களை தொடர்ந்து கர்நாடகத்தில் 98, ஆந்திராவில் 63, மேற்கு வங்காளத்தில் 53, உத்தரபிரதேசத்தில் 48, தெலுங்கானாவில் 23, குஜராத்தில் 22, பஞ்சாப்பில் 19, டெல்லியில் 17, மத்திய பிரதேசத்தில் 14, ராஜஸ்தானில் 12, ஜம்மு காஷ்மீரில் 11, ஒடிசாவில் 10 பேர் பலியாகி உள்ளனர்.

    அரியானா, ஜார்கண்டில் தலா 7 பேரும், அசாம், புதுச்சேரி, உத்தரகாண்டில் தலா 4 பேரும், சத்தீஷ்கார், கோவாவில் தலா 3 பேரும், அந்தமான் நிகோபார், கேரளாவில் தலா 2 பேரும், பீகார், திரிபுராவில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

    மொத்த பலியில் தொடர்ந்து மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. அங்கு மொத்தம் 15 ஆயிரத்து 842 பேர் பலியாகி இருக்கிறார்கள். தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் உள்ள டெல்லியில் 4,021 பேரும், கர்நாடகத்தில் 2,594 பேரும், குஜராத்தில் 2,508 பேரும், உத்தரபிரதேசத்தில் 1,778 பேரும், மேற்கு வங்காளத்தில் 1,731 பேரும், ஆந்திராவில் 1,537 பேரும், மத்திய பிரதேசத்தில் 900 பேரும் இறந்துள்ளனர்.

    இதுவரை ராஜஸ்தானில் 715, தெலுங்கானாவில் 563, பஞ்சாப்பில் 442, அரியானாவில் 440, ஜம்மு காஷ்மீரில் 407, பீகாரில் 330, ஒடிசாவில் 207, ஜார்கண்டில் 125, அசாமில் 109, உத்தரகாண்டில் 90, கேரளாவில் 84, சத்தீஷ்காரில் 61, புதுச்சேரி மற்றும் கோவாவில் தலா 56, திரிபுராவில் 28, சண்டிகாரில் 19, இமாசலபிரதேசத்தில் 14, அந்தமான் நிகோபாரில் 10, லடாக் மற்றும் மணிப்பூரில் 7, மேகாலயா, நாகலாந்தில் தலா 5, அருணாசலபிரதேசத்தில் 3, தத்ராநகர்ஹவேலி டாமன் தையுவில் 2 பேரும், சிக்கிமில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

    நாட்டில் கொரோனா இறப்புவிகிதம் என்பது 2.10 சதவீதமாக சரிந்துள்ளது.

    குணம் அடைந்தோர் விகிதாசாரம் 66.31 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. இந்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    நாடு முழுவதும் ஜூலை மாதத்தில் மட்டுமே 1 கோடியே 5 லட்சத்து 32 ஆயிரத்து 74 மாதிரிகளுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சராசரியாக தினசரி 3 லட்சத்து 39 ஆயிரத்து 744 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

    இதுவரையில் ஒட்டுமொத்தமாக 2 கோடியே 8 லட்சத்து 64 ஆயிரத்து 750 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானியும், ஊடக ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் லோகேஷ் சர்மா தெரிவித்தார்.

    தற்போது நாட்டில் அரசு துறை சார்பில் 917 பரிசோதனைக்கூடங்களும், தனியார் துறை தரப்பில் 439 ஆய்வுக்கூடங்களும் கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டுள்ளன.
    Next Story
    ×