search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் விஷசாராயம் விவகாரம்
    X
    பஞ்சாப் விஷசாராயம் விவகாரம்

    பஞ்சாப்: விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 104 ஆக உயர்வு

    பஞ்சாப்பில் விஷச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ், படாலா மற்றும் டார்ன்தரன் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த பலர் கடந்த வாரம் புதன்கிழமை (ஜூலை 29) இரவில் விஷ சாராயம் குடித்துள்ளனர்.

    விஷ சாராயம் குடித்தவர்களில் பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையில், பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த சனிக்கிழமை நிலவரப்படி 80 என்ற நிலையில் இருந்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொள்ள பஞ்சாப் முதல்மந்திரி அமரீந்தர் சிங் உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த சில நாட்களாக இந்த மாவட்டங்களில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்றது. விஷசாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பஞ்சாப்பில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. இந்த பலி எண்ணிக்கை உயர்வு மருத்துவமனை உயிரிழப்பு மற்றும் ஏற்கனவே உயிரிழந்து கணக்கில் வராமல் இருந்தவர்களையும் சேர்த்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    விஷ சாராயம் குடித்து மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அந்த விவரங்களை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவிக்க மறுத்து வருகின்றனர் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

    உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமலேயே குடும்பத்தினர் ஏற்கனவே இறுதி சடங்கு செய்துவிட்டதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், இந்த விஷ சாராய விவகாரத்தில் இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் போலீஸ் , கலால், வரி துறைகளை சேர்ந்த 13 அதிகாரிகளும் உள்ளடக்கம் ஆகும்.  

    இந்த விவகாரம் தொடர்பாக மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×