search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாடு பயணி
    X
    வெளிநாடு பயணி

    வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு சொந்த செலவில் 7 நாள் தனிமை கட்டாயம்

    வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு சொந்த செலவில் 7 நாள் தனிமை கட்டாயமாக்கப்பட்டு திருத்தப்பட்ட விதிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
    புதுடெல்லி:

    கொரோனா ஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு வரும் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய திருத்தப்பட்ட விதிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

    இதில் முக்கியமாக பயணிகள் அனைவரும் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் 7 நாட்கள் அவர்கள் சொந்த செலவில் நிறுவன தனிமையும், மீதி 7 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தலையும் கடைப்பிடிக்க வேண்டும்.

    இது தொடர்பாக பயணிகள் அனைவரும் www.newdelhiairport.in என்ற இணையதளத்தில் உறுதிமொழி ஒன்றை அளிக்க வேண்டும். இந்த தனிமைப்படுத்தலில் இருந்து கர்ப்பிணி, குடும்பத்தில் இறப்பு, பயங்கர நோய், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர் ஆகியோருக்கு மட்டுமே விதிவிலக்கு பெற முடியும்.

    இந்த விதிவிலக்கை பெற விரும்புவோர் தங்கள் பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பே அந்த இணையதளத்தில் இது குறித்து தெரிவிக்க வேண்டும். எனினும் இது தொடர்பாக அரசுதான் முடிவு எடுக்கும்.

    இவர்களைதவிர பயணத்துக்கு 96 மணி நேரத்துக்கு முன் கொரோனா பரிசோதனை செய்து, அதில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்களும் நிறுவன தனிமை மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை. இந்த பரிசோதனை அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். இதை இந்தியா வந்திறங்கியபின் விமான நிலையத்திலும் சமர்ப்பிக்கலாம்.

    பயணிகள் அனைவரும் தங்கள் செல்போன்களில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். நாட்டின் நிலப்பகுதி எல்லை வழியாக தாயகம் திரும்புவோருக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.

    விமானம் அல்லது கப்பலில் பயணத்தின்போது பயணிகள் அனைவரும் முககவசம், கை கழுவுதல் போன்ற சுகாதாரமான சூழலை பேண வேண்டும். விமான நிலையத்தில் இறங்கியதும் தங்கள் சுய உறுதிமொழி படிவத்தை விமான நிலைய சுகாதார அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். இணையத்தில் பதிவு செய்யாதவர்கள் விமானம் அல்லது கப்பலிலேயே நகல் படிவம் பெற்று சமர்ப்பிக்கலாம்.

    அதில் விதிவிலக்கு பெற்றிருக்கும் பயணிகளை தவிர மீதமுள்ளவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் ஏற்பாடு செய்துள்ள இடங்களில் சொந்த செலவில் தங்க வேண்டும். அங்கு 7 நாட்கள் கட்டாய தனிமை பேணப்படும்.

    இந்த நாட்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் தொற்று பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டால் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர். தொற்று இல்லாதவர்கள் 7 நாள் தனிமை முடித்து வீட்டுக்கு அனுப்பப்படுவர். அங்கு மீதமுள்ள 7 நாள் தனிமையை கடைப்பிடிக்க வேண்டும்.

    இந்த திருத்தப்பட்ட விதிமுறைகள் வருகிற 8-ந்தேதி அமலுக்கு வரும்.

    இந்த தகவல்கள் அனைத்தும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×