search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரைவு குழு தலைவர் கஸ்தூரிரங்கன்
    X
    வரைவு குழு தலைவர் கஸ்தூரிரங்கன்

    5-ம் வகுப்பு வரை தாய்மொழி கல்வியை கொண்டு வந்திருப்பது ஏன்? வரைவு குழு தலைவர் பேட்டி

    புதிய கல்விக்கொள்கையில் 5-ம் வகுப்புவரை தாய்மொழி கல்வியை கொண்டு வந்திருப்பதன் பின்னணி குறித்து வரைவு குழு தலைவர் கஸ்தூரிரங்கன் விளக்கி உள்ளார்.
    புதுடெல்லி:

    புதிய கல்வி கொள்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 29-ந் தேதி டெல்லியில் கூடிய மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து இந்த புதிய கல்விக்கொள்கை நாட்டின் பேசுபொருளாக மாறி உள்ளது.

    இதையொட்டி, புதிய கல்விக்கொள்கையின் வரைவு குழு தலைவரும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் தலைவருமான கே.கஸ்தூரிரங்கன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பட்டப்படிப்பு அளவில் ஒரு தாராளவாத அல்லது பல்வேறு படிப்புகளை படிப்பதற்கான யோசனையும், 4 ஆண்டு கால இடைநிலை கல்வி கட்டமைப்பும், பல வகையான திறன்களை பெற்றுக்கொள்ள நிறைய வாய்ப்புகளை வழங்குகிறது. இது வேலை வாய்ப்புக்கும் பயன்படும். இவை அனைத்தும் 21-ம் நூற்றாண்டின் திறன்களை வளர்ப்பதில் ஒரு பகுதி ஆகும். ஏனென்றால், இது 21-ம் நூற்றாண்டில் இளைஞர்களுக்கு தேவையான தகவல்தொடர்பு, படைப்பாற்றல், சிக்கல் தீர்வு போன்றவற்றை அளிக்க ஏற்ற விஷயங்களை கொண்டுள்ளது.

    சிறப்பான தொழில்நுட்பங்களையும், முன்னேற்றங்களையும் பயன்படுத்தி கல்வியை சரியான பாதையில் கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டதுதான் புதிய கல்விக்கொள்கை. 4 ஆண்டு கால பட்டப்படிப்பு, ஒரு குறிப்பிட்ட அளவிலான முதிர்ச்சியில், தொழில் முறை ஆர்வத்தை தொடர ஒரு இளைஞர் விரிவான அறிவுத்தளத்தை வைத்திருக்க தயார்ப்படுத்தும்.

    ஒவ்வொரு ஆண்டும் கல்வியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் திறன் இதில் உள்ளது. ஒருவர் படிப்பை இடையில் நிறுத்தி விட்டு ஒரு குறிப்பிட்ட தொழிலில் ஈடுபட நினைத்தாலும்கூட, அவர் அதற்கான குறிப்பிட்ட திறனை வளர்த்திருப்பார். அந்த கொள்கையின் அடிப்படையில் நீங்கள் செயல்பட்டால், முதல் அண்டில் ஒரு சான்றிதழ் வழங்கப்படும். ஏனென்றால் நீங்கள் ஏதாவது செய்துள்ளர்களா என்பதை உங்கள் நிறுவன அதிபரிடம் காட்டுவதற்கு இது உதவும். முதலில் ஜூனியர் டிப்ளமோ, அடுத்து சீனியர் டிப்ளமோ, அதன்பின்பு இளநிலை பட்டம் என்ற அளவில் பட்டப்படிப்பு அமையும்.

    பல்வேறு வகையிலான அறிவியல், கலைகள் பற்றிய முதுநிலை பட்டத்துடன் எம்.பில்.பட்டம் போட்டியிட முடியவில்லை. அதே நேரத்தில் ஒரு சிறந்த தரமான அறிவையும், ஒரு வேலையை செய்வதற்கான சிறந்த திறனையும் கொண்ட பட்டம் பெற சிறந்த வழியை ஒருவர் விரும்புகிறபோது, அதை எம்.பில். நிறைவு செய்யாது என்று நாங்கள் நினைக்கிறோம். அதனால்தான் அதை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம்.

    5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வியை கற்பிக்க வேண்டும் என்று கொண்டு வந்திருக்கிறோம். இந்தியாவில் ஆங்கிலம் பேசும் மக்கள் தொகை 15 அல்லது 16 சதவீதம்தான். அது பெரிய எண்ணிக்கை அல்ல. 5-ம் வகுப்பு வரை தாய்மொழி கல்வியை கொண்டு வருவதின் காரணம், குழந்தைகள் பிறந்தது முதல் வெளியுலக தொடர்பை தாய்மொழியில்தான் மேற்கொள்கின்றன. இதன் காரணமாக உள்தொடர்புக்கு தாய்மொழியில் பதிலளிக்கும் மூளையின் செயல்திறன், வேறு எதையும் விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    ஒரு குழந்தை மற்றொரு வெளிநாட்டு மொழியின்மூலம் செயல்படுவதைவிட, அதன் தாய்மொழியின் மூலம் புதிய யோசனைகள், புதிய அறிவியல் மற்றும் கணிதத்தை எடுத்துக்கொள்வது என்பது மிகவும் இயல்பானது. எனவேதான் 5-ம் வகுப்பு வரை தாய்மொழி கல்விக்கு பரிந்துரை செய்திருக்கிறோம்.

    இது நீங்கள் ஆங்கிலம் கற்பதை தடை செய்யாது. அதை கவனித்துக்கொள்ளவும் ஏற்பாடு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×