search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவகவுடா
    X
    தேவகவுடா

    நீக்கப்பட்ட திப்பு சுல்தான் பாடத்தை மீண்டும் சேர்க்க வேண்டும்: தேவகவுடா

    திப்பு சுல்தான் பெயரில் பள்ளிக்கூடங்கள் இருப்பதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் அவரை பற்றி பள்ளி பாடத்திட்டத்தில் இருந்தால் எதிர்ப்பு தெரிவிப்பார்களா?. என்று தேவகவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.
    பெங்களூரு :

    பெங்களூருவில் உள்ள ஜனதாதளம்(எஸ்) கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    மாநில அரசு நிலச்சீர்திருத்த சட்ட திருத்தம், ஏ.பி.எம்.சி.யில் சட்ட திருத்தம் செய்துள்ளது. இதுகுறித்து ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகளுடன் வருகிற 4-ந் தேதி ஆலோசனை நடத்த உள்ளேன். கட்சியின் வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. இயேசு கிறிஸ்து, திப்பு சுல்தான், ராணி அப்பக்கதேவி உள்ளிட்டோர் தொடர்பான பள்ளி பாடங்களை அரசு நீக்கியுள்ளது.

    ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டவர் திப்பு சுல்தான். அவரது பெயரில் கலபுரகி, விஜயாப்புரா, ஸ்ரீரங்கபட்டணா, ராமநகர், தார்வாரில் பள்ளிக்கூடங்கள் இருக்கிறது. அதுபற்றி அரசுக்கு தெரியவில்லையா?. திப்பு சுல்தான் பெயரில் பள்ளிக்கூடங்கள் இருப்பதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் அவரை பற்றி பள்ளி பாடத்திட்டத்தில் இருந்தால் எதிர்ப்பு தெரிவிப்பார்களா?. எல்லாரையும் சமமாக பார்க்க வேண்டும். மாநில மக்கள் அனைவரும் சமாதானம் ஆகும்படியான முடிவை அரசு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். திப்பு சுல்தான் உள்ளிட்டோர் குறித்து பள்ளி பாடபுத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டதை மீண்டும் சேர்க்க வேண்டும்.

    இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக போராடுவதற்கு ஜனதாதளம்(எஸ்) கட்சி தயாராக இருக்கிறது. கொரோனா இருப்பதால் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, அரசுக்கு எதிராக போராடுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். விவசாயிகளுக்கு முற்றிலும் எதிரான நிலச்சீர்திருத்த சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கும் ஜனதாதளம்(எஸ்) கட்சி தயாராகி வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான சட்டம் குறித்து கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு கடிதம் எழுதி உள்ளேன். பா.ஜனதா கட்சியை சேர்ந்த சி.பி.யோகேஷ்வர் கூறிய கருத்துக்கு ஆதாரம் உள்ளதா?. குமாரசாமி யாரையும் சந்தித்து பேச வேண்டும் என்ற நிலை இல்லை. குமாரசாமி தலைமையில் ஒரு காலத்தில் ஆட்சி நடைபெறும். ஜனதாதளம்(எஸ்) கட்சி பற்றி காங்கிரஸ், பா.ஜனதா கட்சி தலைவர்கள் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×