search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி
    X
    குமாரசாமி

    கூட்டணி ஆட்சியில் பின்இருக்கையில் அமர்ந்து வண்டி ஓட்டினீர்கள்: குமாரசாமி மீண்டும் தாக்கு

    கூட்டணி ஆட்சியில் பின்இருக்கையில் அமர்ந்து வண்டி ஓட்டினீர்கள் என்றும், காங்கிரசார் தங்களின் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள என்னை பயன்படுத்த முயற்சி செய்தீர்கள் என்றும் காங்கிரசை குமாரசாமி மீண்டும் தாக்கியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரசுக்கு இன்னொரு பெயர் குதிரை பேரம் என்று குமாரசாமி நேற்று முன்தினம் காட்டமாக கூறினார். இதற்கு பதிலளித்த காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முதல்-மந்திரி பதவியில் அமர்ந்தபோது நன்றாக இருந்ததா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முதல்-மந்திரி ஆனபோது காங்கிரசின் தார்மீகம் நன்றாக இருந்ததா? என்று என்னை பார்த்து அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. என்னிடம் நேரடியாக கேள்வி எழுப்ப முடியாத காங்கிரஸ் தலைவர்கள் கட்சி பெயரில் டுவிட்டரில் கருத்தை பதிவிட்டு ஓடிவிட்டனர். ஆகட்டும், விவாதம் தொடங்கிவிட்டது. அதை நான் முழுமையாக பூர்த்தி செய்கிறேன். காங்கிரஸ் மேலிடம் மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சி முன்பு நடுங்கி வந்து நின்று, நாங்கள் வேண்டாம் என்ற கூறியபோதும் என்னை முதல்-மந்திரி பதவியில் அமர்த்தினீர்கள்.

    அதன் பிறகு எனக்கு அழுத்தங்களை கொடுத்து பின்இருக்கையில் அமர்ந்து நீங்கள் வண்டியை ஓட்டினீர்கள். அப்போது காங்கிரசின் தார்மீகம் எங்கிருந்தது?. விவசாய கடனை தள்ளுபடி செய்து அரசியல் தர்மத்தை பின்பற்றி இருக்க வேண்டும். உங்களின் ஆட்டம் அனைத்தும் தெரிந்திருந்தும், சாணக்கியமாக செயல்பட்டு விவசாயிகளின் நலனை காத்தேன். இதில் எனது தனிப்பட்ட லாபம் எதுவும் இல்லை. வேண்டாம் என்று கூறியபோதும், எங்கள் வீட்டு வாசலுக்கு நீங்கள் வந்தீர்கள். நான் அப்பாவியாக இருக்கவில்லை. காங்கிரசார் தங்களின் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள என்னை பயன்படுத்த முயற்சி செய்தீர்கள். ஆனால் மாநில விவசாயிகளின் நலனை காக்க நான் சாதுரியமாக செயல்பட்டேன் என்பது உங்களின் நினைவில் இருக்கட்டும். கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவு வந்ததும் காங்கிரஸ் தேசிய மற்றும் மாநில தலைவர்கள் தேவேகவுடாவிடம் வந்தனர்.

    அங்கு நடைபெற்ற கூட்டத்தில் தேவேகவுடா, காங்கிரசை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே முதல்-மந்திரி ஆகட்டும் என்று கூறினார். ஆனால் அவரை முதல்-மந்திரி ஆகவிடாமல் காங்கிரஸ் தலைவர்களே தடுத்தனர். அந்த தலைவர்கள் யார்-யார் என்பதை காங்கிரஸ் தேடி தெரிந்து கொள்ளட்டும். அப்போது தார்மீகம் குறித்த கேள்விக்கு பதில் கிடைக்கலாம். நாட்டில் எத்தனை மாநிலங்களில் காங்கிரஸ் பலமாக உள்ளது? என்பதை அக்கட்சி தலைவர்கள் கூற வேண்டும். அக்கட்சிக்கு தலைவர்கள் இருக்கிறார்களா? அல்லது காங்கிரஸ் டுவிட்டரில் மட்டுமே செயல்படுமா?.

    வேறு கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு மாறுவேடம் போட்டு சேர்த்துக் கொள்வதற்கும், பா.ஜனதா ஆபரேஷன் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி ஆட்சியை கவிழ்ப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. விமர்சனத்திற்கு விமர்சனத்தை பதிலாக கூறுவதால் தான் காங்கிரஸ் இன்று மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கபட அரசியலை எந்த வாசலில் இருந்து செய்தாலும் அது தவறானதே.

    இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×