search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடை
    X
    டாஸ்மாக் கடை

    டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து செயல்பட தடை இல்லை- ஐகோர்ட் உத்தரவுக்கு எதிரான தடை நீட்டிப்பு

    ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான இடைக்கால தடை தொடரும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், மது வாங்க வருவோருக்கு ஆதார் கட்டாயம் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் மதுபானக் கடைகளைத் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

    இதையடுத்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த மே 7-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்த நிலையில், பெரும்பாலான மதுக்கடைகளில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படாமல் நீண்ட கூட்டத்தில் மதுப்பிரியர்கள் நின்று மது பாட்டில்களை வாங்கிச்சென்றனர்.

    இதனால், மனுதாரர்கள் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். தவிர, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பிலும் மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

    இந்த வழக்கை மே 8-ம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மதுக்கடைகளை மூடவும், ஆன்லைன் மூலம் மதுவகைகளை விற்பனை செய்யவும் உத்தரவிட்டது. 

    நிபந்தனைகளுடன் மது வகைகளை விற்க வேண்டும் என்ற மே 6-ம் தேதி உத்தரவையும், மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்ற மே 8-ம் தேதி உத்தரவையும் எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிபந்தனைகளுக்குட்பட்டு மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கும், மதுக்கடைகளை மூட வேண்டும் என மே 8-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். இதனால் தமிழக அரசு அனுமதித்துள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து செயல்படுகின்றன. 

    இவ்வழக்கில் எதிர்மனுதாரர்கள் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான இடைக்கால தடையை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், டாஸ்மாக் வழக்கில் ரிட் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் என்றும் தெரிவித்தனர்.
    Next Story
    ×