search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அத்வானி
    X
    அத்வானி

    5-ந் தேதி அயோத்தியில் கோலாகலம் - ராமர்கோவில் பூமி பூஜையில் பங்கேற்க அத்வானிக்கு அழைப்பு

    அயோத்தியில் 5-ந் தேதி கோலாகலமாக நடைபெற உள்ள ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்க அத்வானிக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பல்லாண்டு கால சட்ட போராட்டங்களுக்கு பின்னர், சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது.

    இந்த தீர்ப்பில் மற்றொரு முக்கிய அம்சமாக, அயோத்தியில் முக்கிய இடத்தில் மசூதி கட்டிக்கொள்ள முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கித்தர மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    தீர்ப்பைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை கோவில் கட்டுவதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

    161 அடி உயரத்தில், 5 கோபுரங்களுடன் பிரமாண்டமாக அமையப்போகிற ராமர் கோவிலுக்கு பூமி பூஜை, வருகிற 5-ந் தேதி கோலாகலமாக நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி விழாவில் பங்கேற்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

    இந்த விழாவில், ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கத்தில் பெரும்பங்காற்றிய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஷ்ரா, செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்தார்.

    மேலும், எல்லா மதங்களை சேர்ந்த தலைவர்களும் விழாவுக்கு அழைக்கப்படுவார்கள், கொரோனா வைரஸ் தொற்று கால விதிமுறைகளின்படி தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டிய சூழலில், 200 பேர் வரையில் மட்டுமே விழாவுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், பொதுச்செயலாளர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி, விசுவ இந்து பரிஷத் செயல் தலைவர் அலோக் குமார் உள்ளிட்டோரும் ராமர்கோவில் பூமி பூஜைக்கு அழைக்கப்பட உள்ளதாக அறக்கட்டளையின் மற்றொரு உறுப்பினரான காமேஷ்வர் சவுபால் தெரிவித்தார்.

    அடிக்கல் நாட்டு விழாவுக்காக குருத்வாராக்கள், சமண கோவில்கள், புத்த கோவில்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களில் இருந்தும் மண் சேரிக்கப்படுவதாக அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார்.

    நேரடி ஒளிபரப்பு

    சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வாக அமையும் என்பதால், அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனும், பிற சேனல்களும் விழாவை நேரடியாக ஒளிபரப்பும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    ராமர் பக்தர்கள், விழா நாளில் தங்கள் வீடுகளில் அல்லது அருகில் உள்ள கோவில்களில் ஒன்றுகூடி கொண்டாடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

    ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்காக அயோத்தி நகரம் இப்போதே தயாராக தொடங்கி விட்டது.
    Next Story
    ×